தவெக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா? - காவல் துறை கேள்விகளுக்கு பதில் அளித்த நிர்வாகிகள்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதற்காக காவல் துறை கேட்டிருந்த கேள்விகளுக்கு, அக்கட்சி நிர்வாகிகள் நேற்று பதில் அளித்தனர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வரும் 23-ம் தேதிநடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி வேண்டி கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார். தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், மாநாடு நடைபெற உள்ள இடத்தைஅன்றே ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்துக்கு கடந்த 2-ம் தேதி ஒருகடிதம் அனுப்பினார். அதில், தவெகமாநாட்டுக்கு அனுமதி அளிப்பதுதொடர்பாக 21 கேள்விகள் கேட்கப்பட்டு, 5 நாட்களில் பதில் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, விழுப்புரம் டிஎஸ்பிசுரேஷிடம், காவல் துறை கேட்டகேள்விகளுக்கான பதிலை எழுத்துப்பூர்வமாக அக்கட்சியினர் நேற்றுஅளித்தனர். தொடர்ந்து, தவெக மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, "காவல் துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கான பதில்களை எழுத்துப் பூர்வமாகக் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளுடன் பேசிய பின்னர், ஓரிரு நாட்களில் முடிவைத் தெரிவிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் முறைப்படி மாநாடு நடத்தப்படும் தேதியை கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE