நாம் அன்றாடம் பருகும் பானங்களில் முக்கியமானது டீ. உழைப்பாளிகள் பலருக்கு இதுவே உற்சாக டானிக். சட்டப்படி டீ தூளில் எந்தவித நிறமூட்டிகளை யும் சேர்க்கக்கூடாது. ஆனால், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட கலப்பட டீ விற்பனை தமிழகத் தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு டீ குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் ரூ.70 லட்சம் மதிப்பிலான 35 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே இடத்தில் 35 டன் கலப்பட டீ தூள் இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கலப்பட டீ தூள் பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளது உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் தெரியவந்துள் ளது. இதுகுறித்து மாநில உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
கடந்த 2016-17ல் தமிழகம் முழுவதும் பல்வேறு டீ கடைகள், விற்பனையாளர்களிடம் இருந்து 106 டீ, காபி தூள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 21 மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனவும், 15 மாதிரிகள் தரம் குறைந்தவை எனவும் தெரியவந்தது.
ஆனால், 2017-18ல் 317 டீ, காபி தூள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 65 மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனவும், 33 மாதிரி கள் தரம் குறைந்தவை எனவும் தெரியவந்துள்ளது. மேலும், கலப்பட டீ தூள் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக கடந்த ஓராண்டில் 132 புகார்கள் பெறப்பட்டு சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆர்.கதிரவன் கூறியதாவது:
கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்படும் டீ கடைகளில் கலப்படம் என்று தெரிந்தேதான் பயன்படுத்துகின்றனர். தரம் குறைந்த டீ தூளை வாங்கி அதில் செயற்கை நிறமூட்டிகளை சேர்த்து விற்கின்றனர். பிரபல டீ தூள் நிறுவனம் 1 கிலோ டீ தூளை ரூ.380-க்கு விற்பனை செய்தால், அதில் பாதியைவிட குறைவாக ரூ.150-க்கு ஒரு கிலோ கலப்பட டீ தூள் கிடைக்கிறது. இதனால், கடைக்காரர்கள் அதிக லாபம் பெறுகின்றனர்.
புற்றுநோய் பாதிப்பு
செயற்கையான வண்ணங்களை ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றில் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அளவு 100 பிபிஎம்-க்கு (பார்ட்ஸ் பெர் மில்லியன்) மேல் இருக்கக்கூடாது. ஆனால், கலப்பட டீ தூளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளின் அளவு சுமார் 2,000 பிபிஎம்-க்கு மேல் இருக்கின்றன.
குறிப்பாக டார்டெரசின், கார்மோசின், சன் செட் யெல்லோ போன்ற நிறமூட்டிகளைச் சேர்க்கின்றனர். இந்த நிறமூட்டிகளைப் பயன்படுத்தும்போது டீயின் தன்மை இருக்கிறதோ இல்லையோ, நிறம் மட்டும் அடர்த்தியாக தெரியும். டீ கடைகளில் கலப்பட டீயைப் பார்த்த உடனேயே கண்டறிவது கடினம். ஏனெனில், அதில் அசல் டீயின் மணமும் இருக்கும். கலப்பட டீ தூள் கொண்டு தயாரிக்கப்படும் டீயை, தொடர்ந்து பருகினால் நாளடைவில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மக்களே மாதிரி சேகரிப்பு
கலப்பட டீ தூளை விற்போர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 59 (1)-ன் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்து, அதிகபட்சம் 6 மாதம் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். டீ கடைக்காரர் மீது சந்தேகம் இருந்தால் பொதுமக்களே கடையில் இருந்து டீ தூள் மாதிரியை சேகரித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுப்பவும் சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் கேள்வி கேட்டால் மட்டும் கலப்பட டீ தூள் பயன்பாட்டை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்டறிவது எப்படி?
சுத்தமான கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி டீ தூளை சிறிதளவு கொட்டினால், அது கலப்படம் இல்லாததாக இருந்தால் கொட்டியவுடன் நிறம் மாறாது. நிறம் மாற சிறிது நேரமாகும். தூளை கொட்டிய சில விநாடிகளிலேயே தண்ணீரில் சாயம் இறங்கி நிறம் மாறினால் அது கலப்படத் தூள் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago