“தமிழக அரசுப் பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக கல்வித் தரம் தாழ்ந்துள்ளதாக சொல்வது சரியல்ல” - இபிஎஸ்

By ரெ.ஜாய்சன்

கோவில்பட்டி: “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக கல்வித்தரத்தை தரம் தாழ்ந்துள்ளதாக கூறுவது சரியல்ல. எந்தப் பள்ளியில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளது என்பதை குறிப்பிட்டுச் சொன்னால் அதனை அரசு சீர் செய்ய வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கல்லூரியில் சான்றிதழ் வாங்க சென்ற பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதுதொடர்பாக அந்தப் பெண் புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது பல மணி நேரம் காக்க வைத்து அழைக்கழிக்கப்பட்டார். திமுக ஆட்சியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் புகார் கெடுக்க சென்றால் கூட அதனை பதிவு செய்யாமல் மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் பெண்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் கொடுமை தொடர்ந்து நடக்கிறது. நான் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அரசுக்கு சுட்டிக்காட்டினாலும், சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்கவில்லை. நிர்வாக திறனற்ற அரசாக இருப்பத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதேபோல் திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனான மருத்துவர் நடத்திய மருத்துவ முகாமில் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதற்கான சான்று.

ஒரு பள்ளியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நபரை தட்டி கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரை கடுஞ்சொற்களால் பேசியதை கண்டிக்கிறோம். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, சமையலறையின் பூட்டில் சமூக விரோதிகள் மனித கழிவைப் பூசி இருக்கின்றனர். ஏற்கெனவே வேங்கைவயல் சம்பவத்துக்கு இதுவரை தீர்வு காணாத நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது. மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளை வீடியோவாக வெளியிட்டும் நடவடிக்கை எடுக்காத அரசு, அந்த வீடியோவை வெளியிட்ட ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் வாடும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சிறை பிடிக்கப்பட்டுள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அருப்புக்கோட்டையில் நடந்த சம்பவம் மக்களை பாதுகாக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற சூழல்தான் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்றபோது என்ன முதலீடுகளை கொண்டு வந்தார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்காக நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டோம். ஆனால் இதுவரை வெளியிடவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை விஸ்தரிப்பு செய்வதற்கு தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வெளிநாடுகளுக்கு சென்று ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற சென்றுள்ளார். அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. கார் பந்தயம் நடத்துவதற்கு என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது‌ இருங்காட்டுக்கோட்டை சோழபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நடத்தாமல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை மத்திய பகுதியில், கார் பந்தயம் நடத்தியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து நடத்தியுள்ளனர். இது நாட்டுக்கு தேவைதானா?. இந்த பணத்தை அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்க பயன்படுத்தலாம். அதேபோல் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. நாட்டு மக்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்று தெரியாமல் இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக அரசின் கஜானாவை காலி செய்து வருகிறார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை. திருநெல்வேலி முதல் தென்காசி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் முறையாக தான் நடந்தது. 2 பாலங்கள் கட்ட வேண்டியது இருந்தது. அதனை இவர்கள் தகுந்த முறையில் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பவானி மேட்டூர் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றும் திட்டத்தில் 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 சதவீத நிலம் கையகப்படுத்தப்படாமல் இந்த ஆட்சியில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை முறையாக கையாளாமல் மாநில நெடுஞ்சாலையில் பணிகளை வருவாயின் அடிப்படையில் மேற்கொள்கிறது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக கல்வித்தரம் தாழ்ந்துவிட்டதாக கூறுவது சரியல்ல. எந்தப் பள்ளியில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளது என்பதை குறிப்பிட்டுச் சொன்னால் அதனை இந்த அரசு சீர் செய்ய வேண்டும்.

தன்மானம் உள்ள கட்சி அதிமுக. அதிகாரத்துக்கு நாங்கள் எப்போதுமே அடிபணிந்தது கிடையாது. எங்கள் தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை இழிவு படுத்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தேர்தலில வெற்றி, தோல்வி என்பது வேறு. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் என்பது முக்கியம். அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவர்கள் மதிக்கப்பட்டனர். தற்போதைய திமுக ஆட்சியில் பல மருத்துவமனையில் மருந்துகளே கிடையாது.

அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இன்று காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன் நியமிக்கவில்லை என உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை தான் இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்காங்கே திறந்து வைத்து வருகின்றனர். திமுகவின் இந்த 40 மாத கால ஆட்சியில் ரூ.3.50 கோடி லட்சம் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மாநில நிதி ரூ.1000 கோடியில் சேலத்தில் கட்டினோம். அதனை இந்த ஆட்சியாளர்கள் திறந்து வைக்கவில்லை. கட்டாத எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசுகின்றனர். கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் கால்நடை பூங்கா குறித்து பேசுவதில்லை,” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடம்பூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் மா.பா. பாண்டியராஜன் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE