சாத்தூர்: போர் ஒத்திகையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை

By இ.மணிகண்டன்

சாத்தூர்: போர் ஒத்திகையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மேலாண்மறைநாட்டைச் சேர்ந்த செல்லத்துரை - மாரியம்மாள் ஆகியோரது மகன் பொன்பாண்டி (39). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பொன்பாண்டி ஊட்டி வெலிங்டனில் எம்.ஆர்.சி. எனப்படும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி முடித்து ஜம்மு காஷ்மீர் வடகிழக்கு பகுதியில் உள்ள 6 வது பட்டாலியனில் ஹவில்தாரராக பணியாற்றி வந்தார்.

கடந்த 4-ம் தேதி ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கன்னிவெடி வெடித்து சம்பவ இடத்திலேயே பொன்பாண்டி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான மேலாண்மறைநாட்டுக்கு நேற்று கொண்டுவரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரர் பொன்பாண்டி உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி நடைபெற்றது. ராணுவ வீரர்கள் அணிவகுத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், மதுரை குரூப் கமாண்டர் கர்னல் வி.கே.எஸ். ஜவான், மேஜர் லாங்கினியா, விருதுநகர் 28வது பட்டாலியன் கர்னல் ராகேஷ்குமார், லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஸ் மற்றும் பட்டாலியன் ராணுவ வீரர்கள் பங்கேற்று பொன்பாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE