விஜய்யின் தவெக கட்சி மாநாட்டுக்கு விக்கிரவாண்டியில் அரசின் அனுமதி கிடைக்குமா?

By எஸ். நீலவண்ணன்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வருகிற 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான அனுமதி வேண்டி, கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அன்று மாலையே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் முறையாக அனுமதி பெறப் பட்டுள்ளதா?, மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கைகள் என்ன? மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

மாநாட்டுக்கு வருவோருக்கு எந்த முறையில் உணவு விநியோகம் நடைபெறும்? மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா? மாநாட்டுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? என்பது உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 5 நாட்களுக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறையின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தற்போதுள்ள சூழல் குறித்து காவல் துறையிடம் கேட்டபோது, “மாநாடு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடம் தேசிய நெடுஞ்சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடைப்பட்டதாகும். இங்கு 5-க்கும் மேற்பட்ட ஆழமான கிணறுகள் உள்ளன. இக்கிணற்றை மூட வேண்டும். மேலும் ஒரு நபர் அமர 10 சதுர அடி இடம் தேவைப்படும். மேடைக்கு 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டாலும் ஒரு ஏக்கருக்கு 4,300 பேர் அமரலாம். அதன்படி சுமார் 3 லட்சம் பேர் அமரலாம். தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து தொகுதிக்கு 500 பேர் என 100 தொகுதிகளுக்கு 50 ஆயிரம் பேரும், 134 தொகுதிகளுக்கு ஆயிரம் பேர் என்றாலும் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரம் பேர் வரை வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தென், மத்திய மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 28 ஏக்கர் நிலமும், சென்னை, புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 40 ஏக்கர் நிலமும், இரு சக்கர வாகனங்களை நிறுத்த தனியாக 3 ஏக்கர் நிலமும் தேவை. தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் நிறுத்தவும் இடம் வேண்டும்.

கடந்த பிப்ரவரி 2014-ம் ஆண்டு, உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் தேமுதிக மாநாடு நடத்தப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், வாகன நெருக்கடியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விஜய் கட்சியினர் குறிப்பிடும் இந்த இடத்தில், திமுக சார்பில் சில மாதங்களுக்கு முன் விழுப்புரம், கடலூர் மக்களவைத் தொகுதிக்கான முதல்வர் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அந்த இரு மாவட்டங்களுக்கானவர்கள் வர, அவர்களுக்கான வாகனங்களை நிறுத்த இந்த இடம் போதுமானதுதான்.

தவெக மாநாட்டில் பங்கேற்க, ஒட்டு மொத்த தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் வந்தால் இந்த இடம் தாங்குமா என்பது தெரியவில்லை. எனவே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த அனுமதி வழங்குவது குறித்து முழுமையாக பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, காவல்துறை எழுப்பிய 21 கேள்விகளுக்கான பதிலை இன்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு குறித்து அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, “ஒருவேளை காவல்துறையினர் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த அனுமதி மறுத்தால், நீதிமன்றம் மூலம் அனுமதி பெறவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மாநாடு நடைபெற இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில், அரசு அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று, அதன்பின் அனுமதி பெற்று மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்வது சவாலானதுதான்” என்று தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE