விநாயகர் சதுர்த்தி நாளன்று 6 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்: இந்து முன்னணி கண்டனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி நாளன்று நடத்த இருக்கின்ற வேலைவாய்ப்பு முகாம்களை வேறு தேதிக்கு தள்ளி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

“ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அரசு, தனியார் துறையில் ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்துக்களை வஞ்சிக்க துடிக்கிறது. தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி நாளன்று நடத்த இருக்கின்ற வேலைவாய்ப்பு முகாம்களை வேறு தேதிக்கு தள்ளி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் வருமாறு: “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையில் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 7-ம் தேதி, 6 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களின் முக்கியமான பண்டிகை. அனைத்து மக்களும் கொண்டாடும் விழா. கோயில்களில், பொது வீதிகளில் திருவிழா நடக்கின்ற நாள்.

சாதிய வேற்றுமைகளை களைந்து, தீண்டாமை ஒழித்து, ஏழை, பணக்காரர் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் ஒரே விழா விநாயகர் சதுர்த்தி விழா.

மத்திய, மாநில அரசுகள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளன. இத்தகைய நாளில் ஆறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை நயவஞ்சகமாக பறிக்கும் செயல் என இந்து முன்னணி கண்டிக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவானது சனிக்கிழமை வருவதால், சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொந்த ஊருக்கும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் செல்பவர்கள் அதிகம். அதனை வசதியாக பயன்படுத்தி, தமிழக அரசு போக்குவரத்துத்துறை 3000-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. இத்தகைய ஏற்பாடுகளால் அதிகமானவர்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்வார்கள் என்ற நிலையில் இந்த வேலைவாய்ப்பு முகாம்களை ஏன் அரசு முடிவு செய்தது என்ற கேள்வி எழுகிறது.

தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அரசு மற்றும் தனியார் துறையில் ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்துக்களை வஞ்சிக்க துடிக்கிறது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டுகிறது. எனவே தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடத்த இருக்கின்ற வேலைவாய்ப்பு முகாம்களை வேறு தேதிக்கு தள்ளி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காத வண்ணம் அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செயல்பட கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE