சிக்கிம் ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த வத்திராயிருப்பு சுபேதார் உடல் நாளை சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த வத்திராயிருப்பைச் சேர்ந்த சுபேதார் தங்க பாண்டியன் உடல் நாளை (செப்டம்பர் 7) சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்தவர் தங்க பாண்டியன் (41). இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 6 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2004ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த தங்க பாண்டியன், வட கிழக்கு மாநிலத்தில் சுபேதாராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சிக்கிம் மாநிலம் பாக்யாங் பகுதியில் ரெனோக் - ரோங்க்லி நெடுஞ்சாலையில் தங்க பாண்டியன் சென்ற ராணுவ வாகனம் 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த வாகனத்தில் இருந்த சுபேதார் தங்கபாண்டியன் உட்பட 4 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தங்கபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான வத்திராயிருப்பு அருகேயுள்ள கான்சாபுரத்திற்கு நாளை கொண்டு வரப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE