வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள் - ஆளுநர், முதல்வர், தலைவர்கள் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, அவரது திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ராஜ்பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சி.யின் படத்துக்கு மலர் தூவிமரியாதை செலுத்தினார்.

தமிழகஅரசின் சார்பில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன் உள்ளிட்டோர் காந்தி மண்டபத்தில் வ.உ.சி. படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்திருக்கும் வ.உ.சி. படத்துக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், துறைமுக தலைவர் சுனில் பாலிவால் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனிலும், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் காந்தி மண்டபத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.க்கு தேசம்நெஞ்சார்ந்த மரியாதை செலுத்துகிறது. அவரது துணிச்சல், புதுமைபடைக்கும் மனப்பாங்கு, வலிமையான தன்னம்பிக்கை ஆகியவை சுயசார்பு பாரதம் பார்வையை நாம் கொள்வதற்கு தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டலுக்கு எதிராக கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனாரின் புகழ் வாழ்க. நாட்டு தொண்டும், மொழி தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்த அவரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கி, விடுதலைப் போராட்டத்தில் தன்னிகரில்லா போராளியாக விளங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் புகழை போற்றி வணங்குகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தேச விடுதலைக்காக தனது உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்து, இறுதிமூச்சு வரை சுதந்திரத்துக்காக போராடிய வ.உ.சி.யின் நினைவைப் போற்றி வணங்குவோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: நாட்டின் விடுதலைக்காக வ.உ.சி. நடத்திய போராட்டங்களையும், அனுபவித்த கொடுமைகளும் நினைத்துப் பார்த்து, நாட்டுக்காக நாமும் உழைக்க வேண்டும் என உறுதியேற்போம்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மநீம தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் வ.உ.சி.யின் நினைவைப் போற்றி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE