புதுச்சேரியில் எம்பிசி-க்கான உள் இடஒதுக்கீடு இன்றி வெளியிட்ட ஆணை ரத்து: ஆளுநர் ஒப்புதல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தொடர் போராட்டங்களால் புதுவையில் 9 துறைகளில், 183 அரசுத் துறை பணியிடங்கள் நிரப்புவதில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உள்இடஒதுக்கீடு இன்றி அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். அப்பதவிகளுக்கு முன்பு இருந்த இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட ஒப்புதல் தந்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு துறைமுகத் துறையில் இளநிலைப் பொறியாளர், காவல்துறையில் உதவி ஆய்வாளர், போக்குவரத்துத் துறையில் இளநிலை பொறியாளர், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையில் புள்ளியியல் அதிகாரி, தொழில் மற்றும் வர்த்தகத்துறையில் தொழில்நுட்ப அதிகாரி, போக்குவரத்துத்துறையில் உதவி வாகன ஆய்வாளர், வேளாண்துறையில் வேளாண் அதிகாரி, திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையி திட்ட அதிகாரி உள்ளிட்ட 9 அரசுத் துறைகளின் 183 குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் மீனவர், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கான உள் இடஒதுக்கீடு இன்றி பொதுவான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என குறிப்பிட்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டது.

அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடை மறுக்கும் அறிவிப்பாணையை வெளியிட்ட அதிகாரிகள் இருவருக்கு எதிராக சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அதிகாரிகள் வீடுகள் வரை போராட்டம் நடந்ததால், அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் குறித்து பல அரசு அதிகாரிகள் முதல்வர் ரங்கசாமியின் வீடு தேடி சென்று முறையிட்டனர். அதையடுத்து, அதிகாரிகளை விமரிசித்து சமூக நல அமைப்புகள் சுவரொட்டியையும் ஒட்டினர். ஒட்டப்பட்ட சுவரொட்டி தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. ஆனாலும், சமூக நல அமைப்புகள் உள் இடஒதுக்கீடு அறிவிப்பாணை ரத்தாகும் வரை போராட போவதாக கூறிவருகின்றன.

இந்த நிலையில், துறைமுகம், காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 9 அரசுத்துறைகளின் 183 காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடை மறுக்கும் அறிவிப்பாணையை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ரத்து செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். அதுகுறித்து அரசின் சார்புச் செயலர் ஜெய்சங்கர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சுற்றறிக்கையை இன்று அனுப்பியுள்ளார்.

அதில், “புதுச்சேரி அரசுப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை சார்பில் 15.3.2023 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதில் குறிப்பிட்டுள்ள குரூப் பி வகை அரசிதழில் பதிவு பெறாத பணியிடங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளை ரத்து செய்வதற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆகவே, அப்பதவிகளுக்கு முன்பிருந்தபடியே இடஒதுக்கீடு வழங்கும் முறையிலான புதிய அறிவிப்புகளை வெளியிடவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE