சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது,” என்று பேசியதைத் தொடர்ந்து, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் ஆளுநரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச் சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார். துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப் புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஓர் ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது,” என்று பேசியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி: இதற்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை வண்டலூரில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா கலந்துகொண்டு, 375 ஆசிரியர்கள்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகத்தின் கல்விதான் சிறந்த கல்வி. தமிழகத்தின் பாடத்திட்டத்தை படித்த பலர் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர். சிலர் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலில் உள்ளனர்,” என்று பதிலளித்திருந்தார்.
» விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயம் செய்யவில்லை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல்
சபாநாயகர் அப்பாவு: நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “ஆளுநர் ரவி இதுபோன்ற தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை.
‘சந்திரயான் 3’ திட்டம் உலகமே வியக்கும் அளவுக்கு பெருமை சேர்த்தது. வீரமுத்துவேல் என்பவர் இந்தத் திட்டத்தின் இயக்குநராக இருந்தவர். அவர் தமிழ்வழி கல்வி கற்றவர். அரசுப் பள்ளியில் பயின்றவர். இவர் மட்டுமல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன், அதேபோல் இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, தற்போதுள்ள வனிதா, நிகர் ஷாஜி, நாராயணன், ராஜராஜன், சங்கரன் உள்ளிட்ட விஞ்ஞானிகளில் 90 சதவீதம் பேர் தமிழ்வழியில் பயின்றவர்கள், இவர்கள்தான் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். இது ஆளுநருக்கு தெரியாதா?” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
துரை வைகோ எம்.பி: “ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாகவே உள்ளார். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது. ஆனால், நாம் மாநில கல்விக் கொள்கை போதும் என்கிறோம். மாநில பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு சமமாகவும், அதைவிட கூடுதலாகவும் உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்” என்றார் துரை வைகோ எம்.பி.
அன்புமணி ராமதாஸ்: முன்னதாக, ஆசிரியர் தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இன்று ஆசிரியர்களின் நிலையும், கல்வியின் தரமும் குறைந்து வருவது கவலையளிக்கும் உண்மை ஆகும். காலியாகி வரும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படுவதே இல்லை. தமிழ்நாட்டில் ஏற்கெனவே குறைக்கப்பட்ட பணியிடங்கள் போக, மீதமுள்ள பணியிடங்கள் கூட முழுமையாக இன்னும் நிரப்பப்படவில்லை. நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் கூட அப்படியே காலியாகத் தான் கிடக்கின்றன. காரணம் கேட்டால், நிதி நெருக்கடி என்று ஒற்றை வரியில் கடந்து செல்கிறது தமிழக அரசு. உயிர் வாழ உயிர்வளி எவ்வளவு முக்கியமோ, அதை விட உயர்வுக்கு கல்வி முக்கியம். ஆனால், கல்வியின் முக்கியம் தமிழக அரசுக்கு தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு உத்வேகம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.
முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, “தமிழகத்தின் பள்ளிக் கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழக மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது. தமிழக பாடத்திட்டம் 2017-18-ம் ஆண்டில், அப்போதைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் முழுமையாக திருத்தப்பட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்டது.
சிறந்த பாடப் புத்தகங்களும் உருவாக்கப்பட்டன. பாடத்திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக இருந்தேன். இன்றைய சூழலில் பிரச்சினை என்பது பாடத்திட்டத்தில் அல்ல. அரசு பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரத்தில் தான் உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாத, பொறுப்பற்ற தன்மையுடைய ஆசிரியர்களால் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மோசமான தரத்துக்கு சென்றுள்ளது. எனவே, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago