விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி அழைப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்திக்காக இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் எனவும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், திருப்பூரில் இன்று (செப்.5) செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு இந்து முன்னணி சார்பில் ஒன்றரை லட்சம் விநியாகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகள் முன்பு ஒன்றரை அடி, இரண்டடி என சுமார் 15 லட்சம் சிலைகளை வைத்து கொண்டாட உள்ளனர்.

திருப்பூரில் 4-ம் நாளும், கோவையில் 5-ம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புக் கடிதம் கொடுத்துள்ளோம். மற்ற மத பண்டிகைகள் போல், இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதுடன் இதனையும் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளோம். பழநியில் நடந்த முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள இந்து முன்னணிக்கு அழைப்பில்லை.

விநாயகர் சிலைகள் வைக்க அரசு தரப்பில் தடை போடும்போது, இந்துக்களின் மத்தியில் தொடர்ந்து எழுச்சி உண்டாகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளோம். திருப்பூரில் நடைபெறும் இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார்.சில இடங்களில், சிலை வைக்க போலீஸ் மூலம் நெருக்கடி தரப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும்.

உளவுத்துறை மூலம் திருப்பூரில் வாழும் வங்கதேசத்தினரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறோம். பெண் போலீஸ் அதிகாரியே தமிழகத்தில் தாக்கப்படுகிறார். போதைப்பொருள் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அரசு அது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த பேட்டியின்போது இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE