2-வது மெட்ரோ ரயில் பணி: சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை 468 மீ. சுரங்கப்பணி நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் இடம்பெற உள்ளன.

3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து ஸ்டெர்லிங் சாலை நோக்கி கடந்த ஆண்டு செப்.9-ம் தேதி சுரங்கப்பாதை பணி தொடங்கியது.

இதற்காக, சிறுவாணி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம், சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வரை 703 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை கடந்த மாதம் நிறைவு செய்தது.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மூலமாக, சுரங்கப்பாதை பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை இடையே2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘பாலாறு’ மூலமாக, தற்போதுவரை 700 மீட்டரில் 468 மீட்டர் வரைசுரங்கப்பாதை அமைக்கும் பணிநிறைவடைந்துள்ளது.

தற்போது,சுரங்கம் தோண்டும் பணி முழுவீச்சில்நடைபெற்று வருகிறது. தினசரி 3 முதல் 4 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. வரும் நவம்பரில் சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது'' என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE