‘திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலம் பணி டிசம்பரில் நிறைவு’

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையிலான கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதம் முடிவடையும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து சென்று பார்வையிட ஏதுவாக திருவள்ளுவர் சிலை முதல் அதன் வலது பக்கத்திலிருந்து எதிரே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் வரையில் கண்ணாடி இழை தரைத்தள நடைப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ''முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உலகமே போற்றுகின்ற விதத்திலே கன்னியாகுமரி கடலின் நடுவிலே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையினை ஏற்படுத்தி சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வழிவகை செய்தார். கன்னியாகுமரி மாவட்டமானது அணைகள், கடற்கரை பகுதிகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டம் என்பதால் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள். மேலும், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையில் ஒரு தியான மண்டபத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கடல்சார் பாலப் பணி மற்றும் இறங்குதள பணிகளுக்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினேன். பொதுப்பணித்துறை சார்பாக கூடுதலாக படகுகள் வந்து நிற்பதற்காக ரூ.33.80 கோடி மதிப்பில் 100 மீட்டர் நீளம் கொண்ட இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இறங்குதளம் அமைந்த பின் 3 கப்பல்கள் வந்து நிற்கும் அளவுக்கு திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவு பெற்று, ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென துறை அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு வந்து பார்த்துவிட்டு செல்லும் நிலைதான் இருந்தது. படகின் காலம், நேரம் கருதியும், படகை இயக்குவதற்கான இடைப்பட்ட பொருளாதார விரயத்தை கருத்தில் கொண்டும், மத்திய, மாநில அரசுகள் இதற்கு பாலம் அமைக்கலாம் என்று முடிவுசெய்தன.

அதனடிப்படையில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கக்கூடிய கண்ணாடி இழை பாலமானது ரூ.37 கோடி மதிப்பில் 77 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் செல்லும் போது முக்கடலின் அழகினை பார்க்க வேண்டுமென்ற அடிப்படையிலும், கடலின் சீற்றத்தினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையிலும் கடின தன்மை கொண்ட கண்ணாடி இழை தரைத்தள பாலமாக (கடல்சார் பாலம்) அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருவள்ளுர் சிலை பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு, திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் கான்கிரீட் தூண்கள் போடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. புதுவையில் இருந்து ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகிய கட்டமைத்தல் பணிகள் நிறைவு பெற்று, நெட்வொர்க் ஆர்க் முழுமையாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. மேலும், எஃகு அலகுகள், இருபுறமும் அமைந்துள்ள கான்கிரீட் தூண்கள் மீது பொருத்தப்படும். இவற்றை பொருத்துவதற்கான அடித்தள பணிகள் முடிந்தவுடன், அனைத்து பணிகளும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும்'' என்றார்.

ஆய்வின் போது குமரி மாாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்எல்ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE