தமிழகத்தில் டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள்: அமைச்சர் தகவல்

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னும் உள்ளிட்ட 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.3.35 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப்.4) திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் தமிழக வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சேவை துறைகளை ஒருங்கிணைத்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஆலோசனை செய்துள்ளோம்.

உலகத்தின் 80 சதவீத நாடுகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 3 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் வரலாற்றிலேயே முதல்முறையாக டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் என்ற நூடுல்ஸை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்திருப்பது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் உணவு 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த உணவு பொருட்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் தரம் குறித்து ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதலமைச்சராக கலைஞர் இருந்த போது தான் மருத்துவ காப்பீடு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ஒருங்கிணைத்து தற்போது மத்திய அரசு ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் மாநில அரசு ரூ.4 லட்சம், மத்திய அரசு ரூ.1 லட்சம் என ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உள்ளது.

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE