சேலம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வீராணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே உள்ள குப்பனூர் வெள்ளையம்பட்டி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு கரித்தூளை பயன்படுத்தி பட்டாசு மற்றும் வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. புதன்கிழமை காலை மினி லாரியில் பட்டாசு மற்றும் கரித்தூள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆலைக்குள் கொண்டு சென்றனர். பட்டாசு ஆலையில் பணியாற்றி வரும் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன்(55), சின்னனூரை சேர்ந்த கார்த்தி(30), முத்துராஜா(47) , சுரேஷ்குமார் ஆகிய நால்வரும் பட்டாசு, வெடி மருந்து பொருட்களை குடோனுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்ததில் மருந்து பொருட்கள் தீ பற்றி விபத்துக்குள்ளானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணகை்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராமன் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சுரேஷ்குமார், முத்துராஜா இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வீராணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ஜெயக்குமாரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு: இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: “சேலத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஜெயராமன் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். விபத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமார், முத்துராஜாவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிடவும், காயம் அடைந்த இருவருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்,” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE