திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

By சி.எஸ். ஆறுமுகம்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று கும்பகோணம், பாபநாசம் வட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர், கும்பகோணத்தில் இரவு தங்கிய அவர், இன்று காலை அணக்குடியில் இருந்து திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை வரை சுமார் 10 கி.மீ தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்குள் சென்று, அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் வருகைப்பதிவேடு, மருந்து, ஊசிகள் இருப்பு, நோயாளிகளின் வருகை, எக்ஸ்-ரே மற்றும் அங்குள்ள அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு உள்நோயாளிகளாக இருந்தவர்களிடம், முறையாக சிகிச்சை அளிக்கின்றார்களா, மருந்து, ஊசிகள் வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சித்த வைத்திய பிரிவுக்குச் சென்ற அவர், அங்கிருந்த பணியாளர்களிடம், இந்தப் பிரிவுக்கு எத்தனை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்காக வைத்திருந்த நிலவேம்பு கசாயத்தை அருந்தி அதன் தரத்தை சோதனை செய்தார். பின்னர், அங்குள்ள சுகாதார வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், இங்கு ஏதேனும் குறைகள் இருந்தால், உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என அங்குள்ளவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த ஒருவர், “மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை, இதனால் நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்” எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்” என அவரிடம் தெரிவித்தார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த விசிட்டின் போது அமைச்சருடன் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மருத்துவர் ராஜாராமன், திருவிடைமருதூர் பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர.ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வக்குமார் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE