ரேஷன் பொருளுக்கு டிக்கெட் வாங்காததால் மாற்றுத் திறனாளியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர் - தென்காசியில் சர்ச்சை

By த.அசோக் குமார்

தென்காசி: ரேஷன் பொருளுக்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்காததால் மாற்றுத் திறனாளியை பேருந்தில் இருந்து நடுவழியில் நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. பார்வை மாற்றுத் திறனாளியான இவர், பாவூர்சத்திரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கந்தசாமி இன்று பொட்டல்புதூர் நியாயவிலைக் கடையில் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு தனது மனைவியுடன் பாவூர்சத்திரத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் மாற்றுத் திறனாளிக்கான இவவச பயண அனுமதிச் சீட்டை காண்பித்து பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவர் வைத்திருந்த ரேஷன் பொருட்களுக்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்க வேண்டும் என பேருந்து நடத்துநர் கூறியுள்ளார். அதற்கு கந்தசாமி, தன்னிடம் பணம் இல்லை என்றும், கஷ்டப்பட்டு ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துவர், தகாத முறையில் பேசி கந்தசாமியை பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் ரேஷன் பொருட்கள் மற்றும் தனது மனைவியுடன் பேருந்தில் இருந்து இறங்கிய கந்தசாமி நடுவழியில் நின்றுள்ளார். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள், வேண்டிய உதவிகளை செய்து, இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், மாற்றுத் திறனாளியான தன்னிடம் கடுமையான முறையில் நடந்துகொண்ட நடத்துநர், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழக பாபநாசம் கிளை மேலாளருக்கு கந்தசாமி புகார் மனு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, பேருந்தில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு லக்கேஜ் டிக்கெட் பெற வேண்டியது அவசியமாக இருப்பினும், மாற்றுத் திறனாளியின் புகார் குறித்து விசாரணை நடத்தி, ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தற்காலிகமாக பணி வழங்காமல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE