மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கே அதிக பயன்: உதயநிதியை சந்தித்த பிறகு டி.கே.சிவகுமார் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னையில் சந்தித்தார். மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குதான் அதிக பயன் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவுமேலாண்மை திட்ட நடவடிக்கைகளை பார்வையிட, கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று வந்தனர். அப்போது, இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில்சிவக்குமார் சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளதால் அவரை சந்திக்கமுடியாத நிலையில், மரியாதை நிமித்தமாக உதயநிதியை சிவக்குமார் சந்தித்ததாக கூறப்படுகிறது.

செய்தியாளர்களிடம் சிவக்குமார் கூறியதாவது: நண்பர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதியை சந்தித்தேன். கர்நாடகாவில், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து அங்கு உள்ள எதிர்க்கட்சிகள் பொறாமையில் உள்ளன. 2028-ம் ஆண்டிலும் காங்கிரஸ் அரசு அமைந்துவிடும் என்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்திலும் பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தற்போது விவாதிக்க விரும்பவில்லை. 2 மாநிலங்களிலும் மழை நன்றாக பொழிந்து உதவியிருக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் அது கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிகபயன் அளிக்கும் என்பதை இங்குஉள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE