“மத்திய அரசின் திட்டத்தை ஏற்காமல் எப்படி நிதி ஒதுக்க முடியும்?” - பாஜக பொதுச் செயலர் ராம.சீனிவாசன்

By கி.மகாராஜன் 


மதுரை: மத்திய அரசின் திட்டத்தை ஏற்காமல் எப்படி நிதி ஒதுக்க முடியும் என தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மதுரையில் 47 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவில் 50 சதவீதத்தை வழங்கியது மத்திய அரசு. மாநில அரசுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திய பாஜக தலைமையிலான மத்திய அரசு தான். மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்காமல் நிதி வழங்க அவசியம் இல்லை. மத்திய அரசின் திட்டத்தை ஏற்காமல் எப்படி நிதி வழங்க முடியும். மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என திமுக அரசு சொல்வது உண்மையல்ல.

தமிழகத்துக்கு ஆளுநர் வேண்டாம் என காங்கிரஸ் சொல்கிறது. அதே காங்கிரஸ் கேரள மாநிலத்தில் ஆளுநருக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்துகிறது. தமிழக மார்க்சிஸ்ட் கட்சியை காங்கிரஸ் ஆதரிக்கிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசை காங்கிரஸ் எதிர்கிறது. கேரளாவில் ஆளுநரை ஆதரிக்கும் காங்கிரஸ் தமிழகத்தில் ஆளுநரை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. அரசியல் அநாகரிகத்துக்கு சொந்தக்கட்சி காங்கிரஸ். தமிழக ஆளுநராக சென்னாரெட்டியை நியமித்து முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு பல தொல்லைகளை கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான்.

முன்னதாக தனது பிறந்தநாளை ஒட்டி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அடையாள அட்டைகளை ராம.சீனிவாசன் வழங்கினார். அப்போது ராம.சீனிவாசன் பேசுகையில், “மதுரை மாநகரம் புகழ் ஓங்கிய மதுரையாக இருக்க வேண்டும். 2 ஆயிரம் ஆண்டு தொடர் வரலாறு கொண்ட நகரம் மதுரை. அடுத்த இடங்களில் காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி நகரங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து 2வது பெரிய நகரம் மதுரை. ஒரு காலத்தில் அரசு மற்றும் மக்களின் பார்வை சென்னைக்கு அடுத்து மதுரையாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது அரசு மற்றும் மக்கள் பார்வையி்ல் படாத நகரமாக மதுரை உள்ளது.

மதுரையை பிரச்சினைக்குரிய நகரமாக பார்க்கிறார்கள். சினிமாவிலும் மதுரையை வன்முறை நகரமாக காட்டுகிறார்கள். போன ஆண்டு மதுரையின் ஜிஎஸ்டி வசூல் ரூ.600 கோடி. கோவையின் ஜிஎஸ்டி வசூல் ரூ.4200 கோடி. ஒரு காலத்தில் மதுரையை விட 7 மடங்கு அதிக வளர்ச்சியில் கோவை செல்கிறது. மதுரையின் மதிப்பை மாற்ற வேண்டும். செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வன்முறை நகரம் என்ற பெயரை மாற்றினால் தான் மதுரைக்கு வளர்ச்சி வரும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

மதுரையிலிருந்து வேலை தேடி வெளியூர் செல்வது குறைந்து வெளியூர் நபர்கள் வேலைக்காக மதுரைக்கு வரும் நிலை வர வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிகளவில் மதுரைக்கு வருகின்றனர். அவர்களை மதுரை ஆட்டோ ஓட்டுனர்கள் நாகரீகமாக கையாள வேண்டும். மதுரையின் தூதுவர்களாக ஆட்டோ ஓட்டுனர்கள் பணிபுரிய வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஆ.நாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட பாஜக பார்வையாளர் கார்த்திக்பிரபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE