“திமுகவில் கட்சிக்குள் அதிருப்தியை நாங்கள் சரிசெய்து கொள்வோம்” - அமைச்சர் கே.என்.நேரு

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: “திமுகவுக்குள் இருக்கும் அதிருப்தி குடும்பத்துக்குள் இருப்பது போன்றது. அதை நாங்களே சரிசெய்து கொள்வோம்” என அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

திருச்சி மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய வட்டச் செயலாளர்கள் “தங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. எந்த வேலையும் கட்சியினருக்கு வழங்கப்படுவதில்லை” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசினர். இது கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியை அப்பட்டமாக வெளிக்காட்டியது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியனுடன் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி விமான நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து, நகராட்சி நிர்வாகத் துறையும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முகாம்களை நடத்தி வருகின்றோம். மேலும், மழைக்காலங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாத வண்ணம் அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “வரும் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்கிறீர்கள். ஆனால் கட்சிக்குள் நிறைய அதிருப்தி உள்ளதே? வட்டச் செயலாளர்கள் அதை மேடையிலேயே வெளிப்படுத்தி உள்ளார்களே?” எனக் கேட்டதற்கு, “ஒரு கட்சி என்றால் ஒருசில பேர் அதிருப்தியில் இருப்பார்கள். அதிருப்தி இருப்பதாக எங்களிடம் சொல்லவில்லை. ஒருவேளை, உங்களிடம் சொல்லியிருக்கலாம்.

ஒரு குடும்பத்திற்குள் ஒருவர் வருத்தப்படுவார், ஒருவர் சந்தோஷமாக இருப்பார். வருத்தமாக இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவது பொறுப்பில் இருக்கும் எங்களுடைய வேலை. அதை நாங்கள் ஒழுங்காகச் செய்வோம். திமுகவுக்குள் இருக்கும் அதிருப்தி குடும்பத்துக்குள் இருப்பது போன்றது. அதை நாங்களே சரி செய்து கொள்வோம் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நிச்சயமாக வரும் தேர்தலில் நாங்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவோம்” என்றார் நேரு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE