தொழிலாளர் நல நிதியை செலுத்த ‘வெப் போர்ட்டல்’ உருவாக்கம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

By கி.கணேஷ்

சென்னை: தொழிலாளர் நலவாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் நல நிதியை நிறுவனங்கள் அதற்காக தொடங்கப்பட்ட "வெப் போர்ட்டலில்" செலுத்தும்படியும், வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்யும் படியும் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:"தமிழ்நாடு தொழிலாளர் நலநிதிச் சட்டம் மற்றும் விதிகளின் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஆண்டு தோறும், ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளர் நல நிதி தொழிலாளியின் பங்காக ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ.40ம் சேர்த்து ரூ.60 வீதம் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணையதளம் வழியாக செலுத்த வசதியாக ‘lwmis.lwb.tn.gov.in’ என்ற வெப் போர்ட்டல் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலையளிப்பவர்கள் தங்கள் நிறுவனங்களை இணைய வழியாக பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை செலுத்தி உடனடியாக இ-ரசீதை பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த வசதியை பயன்படுத்தி வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யும்படியும், 2024ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி, கொடுபடாத் தொகை போன்றவற்றை இணையவழியாக செலுத்தும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாரியத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும் வெப் போர்ட்டலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை தொழிலாளர் நல நிதி செலுத்தாதவர்கள் நிறுவனம் தொடங்கிய ஆண்டில் இருந்து தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். நிலுவைத் தொகை செலுத்துவதற்கான வசதியும் வெப் போர்ட்டலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று நலவாரிய செயலாளர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE