மகளிர் ஆணையத்தில் உதவி பேராசிரியை புகார்: பச்சையப்பன் கல்லூரி செயலர், முதல்வருக்கு இறுதி சம்மன்

By செய்திப்பிரிவு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி செயலாளர் மீது அளித்த புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜரான உதவி பேராசிரியையிடம் ஆணையத்தின் தலைவர் விசாரணை நடத்தினார். 2 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத கல்லூரியின் செயலாளருக்கு இறுதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றி வரும் விலங்கியல் துறை உதவி பேராசிரியர் குங்குமப்பிரியா, கல்லூரியின் செயலாளரும், முதல்வரும் தன்னை மரியாதை குறைவாக நடத்தியதாகவும், மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் சார்ந்துள்ள பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பிலும் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புகார் அளித்த உதவி பேராசிரியை மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் ஆகியோர் ஆக.12-ம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, 12-ம் தேதி உதவி பேராசிரியை குங்குமப்பிரியா ஆஜரானார். ஆனால், கல்லூரியின் செயலர், முதல்வர் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், உதவி பேராசிரியை மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரியின் செயலர், முதல்வர் ஆகியோர் செப்.2-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உதவி பேராசிரியை குங்குமப்பிரியா, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் சரவணன், கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் சேது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி முன்பு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார்கள். ஆனால், கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வர் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.

இது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதவிபேராசிரியை அளித்த புகார் மீது விசாரணை நடத்துவதற்காக பச்சைப்பயன் கல்லூரி செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. செப்.5-ம் தேதி ஆஜராகுமாறு அவர்களுக்கு இறுதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் கண்டிப்பாக ஆஜராவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு ஆஜராகவிட்டால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது மகளிர் ஆணையத்தில் பெண்கள் தைரியமாக புகார் செய்ய முன்வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவிகள் புகார்களை அளிக்க உள்புகார் குழு அமைக்க கல்லூரி நிர்வாகத்தினரை அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சஸ்பெண்ட் உத்தரவு: இதற்கிடையே, ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்ததாக கூறி உதவி பேராசிரியை குங்குமப்பிரியாவை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE