“பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறோம்” - அமைச்சர் உதயநிதி

By செய்திப்பிரிவு

சென்னை: பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆக. 31-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக.31 மற்றும் செப்.1 என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற கார் பந்தயத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.

தெற்காசியாவில் இதுவரை நடைபெறாத மிக நீளமான (3.5 கிமீ) சாலை கார் பந்தயம் எனும் பெருமையை சென்னை கார் பந்தயம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி போட்டிக்கான முன்னேற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இரு பிரிவுகளின்கீழ் மொத்தம் 14 அணிகளில் 40 பேர் பங்கேற்றனர். பயிற்சி போட்டிகளை தொடர்ந்து தகுதிச்சுற்று, பிரதான பந்தயங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தன. இந்த போட்டிகளில் இங்கிலாந்து, போர்ச்சுகல், செக் குடியரசு, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நடந்து முடிந்த பார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: திரில்லான சென்னை பார்முலா 4 கார் பந்தயம் கண்கவர் பாணியில் இனிதே நிறைவடைந்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். அதற்கேற்ப மைதானத்தில் கார் பந்தய ஓட்டுநர்கள், பிரகாசமான ஒளிரும் இரவில் தங்களது வாகனங்களில் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அந்தவகையில் பார்முலா 4 கார் பந்தயம் இந்தியா மற்றும் தமிழகத்தின் விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். பார்முலா கார் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறோம்.

இதில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த நிகழ்வை நனவாக்குவதற்கு ஆதரவளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது சிறப்பு நன்றிகள். இந்நிகழ்வை மாபெரும் வெற்றியடைய செய்த அரசு அதிகாரிகள், ஆர்.பி.பி.எல். நிர்வாகம் மற்றும் சென்னை மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள செய்தியில் கூறியிருப்பதாவது: பார்முலா 4 சென்னை கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023 டென்னிஸ் தொடர், ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023, பன்னாட்டு அலைச்சறுக்கு போட்டி 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா 2023 ஆகியவற்றின் வெற்றிகளைத் தொடர்ந்து, தமிழகம் விளையாட்டு மேம்பாட்டுக்கான சிறப்பான வளர்ச்சிப்பாதையை அமைத்து வருகிறது. எல்லைகளைத் தொடர்ந்து விரிவடையச் செய்வோம், ‘இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழகம்’ எனும் பெருமையை உறுதியாகத் தக்கவைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்