சென்னை: “முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணை அளித்துள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு ஆய்வு நடத்துவது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழு கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. கண்காணிப்புக்குழு அடுத்த 2 மாதங்களில் மீண்டும் கூடி வல்லுனர் குழு உறுப்பினர்களை முடிவு செய்யும் என்றும், அடுத்த ஓராண்டுக்குள் ஆய்வை முடித்து வல்லுனர் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் வலியுறுத்தப்பட்டு, கண்காணிப்புக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்கள் அநீதியானவை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2021-ஆம் ஆண்டின் அணை பாதுகாப்பு சட்டத்தின்படி, பெரிய அணைகளின் பாதுகாப்பு குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதால், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்று கேரள அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை ஏற்றுக் கொண்ட கண்காணிப்புக் குழு, முல்லைப் பெரியாறு அணையில், கடைசியாக 2011&ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால், இப்போது மீண்டும் பாதுகாப்பு ஆய்வு நடத்த ஆணையிடுவதாக தெரிவித்துள்ளது.
அணை பாதுகாப்பு சட்டத்தின் கூறுகளையும், முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆய்வு நடத்தப் பட்டு 13 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதையும் கருத்தில் கொண்ட கண்காணிப்புக் குழு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டிலும், அதன்பின் 2014-ஆம் ஆண்டிலும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் ஆணையிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பது தான் கண்காணிப்புக் குழுவின் பணியாகும். ஆனால், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் அங்கமான பேபி அணையை வலுப்படுத்த பல ஆண்டுகளாக தமிழக அரசு முயன்று வருகிறது. ஆனால், அதற்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பேபி அணையை வலுப்படுத்த அங்குள்ள 15 மரங்கள் வெட்டப்பட வேண்டும். அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டும் கூட அதை கேரளம் மதிக்கவில்லை. ஆனால், கேரள அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று அணையில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள குழு ஆணையிடுகிறது என்றால், கண்காணிப்புக் குழுவின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டு, அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு வதந்தி பரப்புவது தடுக்கப்படும். ஆனால், அணை பாதுகாப்பு சட்டத்திற்கு முன்பே பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல், அணைப் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த கேரள அரசு துடிப்பதும், அதற்கு கண்காணிப்புக் குழு துணை நிற்பதும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை மேலும் தாமதமாக்கும் என்பதால் தான் இதை பா.ம.க எதிர்க்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருந்தாலும், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது. அறிவியல்பூர்வ ஆய்வு முடிந்த பிறகு அணையை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் கூட, அதன்பிறகு அணை 152 அடி நீர்மட்டத்தை தாங்குமா? என்பதை உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகு தான் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகிவிடும். முல்லைப் பெரியாறு அணை சிக்கல் அவ்வளவு காலம் நீடிக்கக்கூடாது.
மாறாக, பேபி அணையை வலுப்படுத்த தடையாக இருக்கும் 15 மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டால், ஓராண்டிற்குள் அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு முடித்து விடும். அதன்பிறகு பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அணை வலிமையாக உள்ளதா? அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாமா? என்ற இரு வினாக்களுக்கும் விடை கிடைத்து விடும். அதன் மூலம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து சிக்கல்களும் நிரந்தரமாக தீர்ந்து விடும். அணையின் பாதுகாப்பு குறித்து திரும்பத் திரும்ப ஆய்வு செய்வதையும் தவிர்க்க முடியும்.
அணை பாதுகாப்பு சட்டத்தின்படி, 2026-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஆய்வு செய்தால் போதுமானது என்பதால், அணைப் பாதுகாப்பு சட்டக் கூறுகளை கடைபிடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. இது தான் இன்றைய நிலையில் சாத்தியமான தீர்வு ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும். மரங்களை வெட்டி, பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்திடமிருந்து பெற வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago