பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் தமிழக வீராங்கனைகள் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வீரர் நிதேஷ் குமார் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பிரிட்டன் வீரர் டேனியல் பெதெல்லை 21க்கு 14, 18க்கு 21, 23க்கு 21 செட் கணக்கில் வீழ்த்தி சாதனை புரிந்திருப்பது பெருமைமிக்கது. அதேபோல இந்திய வீரர் யோகேஷ் கதுனியா ஆடவர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பதும் பாராட்டுக்குரியது.

குறிப்பாக பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக வீராங்கனைகள் இருவரின் வெற்றியால் தமிழக மக்கள் பெருமை அடைகிறார்கள். மேலும், உலக அளவில் இந்தியாவின் புகழும், தமிழக வீராங்கனைகளின் புகழும், தமிழ்நாட்டின் புகழும் பரவுகிறது. வீராங்கனைகள் இருவரும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் பதக்கம் வென்றுள்ளனர்.

வீராங்கனைகளின் விளையாட்டிற்கு துணை நின்ற பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷா ராமதாஸ் ஆகியோரின் வெற்றியால் தமிழக விளையாட்டு வீரர்கள் உற்சாகம் அடைகிறார்கள். பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி பதக்கங்களை வென்றுள்ளது பாராட்டுக்குரியது.

பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோரை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன். பதக்கம் வென்றிருக்கும் தமிழக வீராங்கனைகள் தொடர்ந்து உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்" என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE