குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூலிப்பதில் தாமதம் கூடாது: ஐகோர்ட்

By கி.மகாராஜன் 


மதுரை: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூல் செய்வதில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாமதம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, 2014-ல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு குற்றாலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் செய்யவும், எண்ணெய் மசாஜ், சோப்பு ஷாம்பு பயன்படுத்த தடை விதித்தும், குற்றாலம் ஊருக்குள் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியே மாற்றவும் என்பது உட்பட 43 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான கடைகளுக்கான நிலுவை வாடகை பாக்கியை கோயில் செயல் அலுவலர் வசூலிக்க வேண்டும். கோயில் கடைகளுக்கான வாடகையை வசூலிப்பதில் பிரச்சினை ஏற்படுவதால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறுகின்றனர்.

அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுவதையும், சமாதான பேச்சுவார்த்தை என்று கூறி காலம் தாழ்த்துவதையும் ஏற்க முடியாது.எனவே குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான கடைகளில், வாடகை நிலுவை தொகையினை கோயில் செயல் அலுவலர் சட்டபடி வசூலிக்க வேண்டும். இது குறித்து செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE