அகரம் பகுதியில் மாணவர்கள், வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு பகிர்ந்த பணியிட மையம் இம்மாத இறுதியில் திறப்பு

By கி.கணேஷ்

சென்னை: “வடசென்னையில், மாணவர்கள் படிக்குமிடம் மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றுவோருக்கான பணியிடத்தை உள்ளடக்கிய பகிர்ந்த பணியிட மையம் இம்மாத இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடைபெறுவதாக,” அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செப்.2) ஆய்வு செய்தார்.குறிப்பாக, சிஎம்டிஏ சார்பில் 0.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் ஏரிக்கரையை ரூ.6.26 கோடியில் மேம்படுத்தும் பணி, அகரம், ஜெகந்நாதன் தெருவில் ரூ.12 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொளத்தூர் மறுவாழ்வு மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம், அதன் அருகில் சென்னை மாநகராட்சியின் பன்னோக்கு மையத்தில் ரூ.2.50 கோடியில் புதிதாக அமைக்கப்படும் பகிர்ந்த பணியிட மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அதன்தொடர்ச்சியாக, வால்டாக்ஸ் ரோடு, சவுகார்பேட்டை, தண்ணீர் தொட்டி தெருவில் ரூ.129.05 கோடியில் கட்டப்படும் 700 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான இடம், ஜார்ஜ் டவுன், பிராட்வே ரோடு, பி.ஆர்.என். கார்டனில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.85.68 கோடியில் கட்டப்படும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 504 குடியிருப்புகளுக்கான இடம், ராயபுரம், 60-வது வார்டு, கிளைவ் பேக்டரி, 234 குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியது: “வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக ரூ. 5,780 கோடியில் 225 பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து, அதில் 100-க்கும் மேற்பட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிஎம்டிஏ, 28 பணிகளை ரூ. 685 கோடியில் மேற்கொண்டுள்ளது. மற்ற துறைகளுக்கு சிஎம்டிஏ சார்பில், ரூ.1,613 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். கடந்த ஆக.26-ம் தேதி, வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்ண மீன்கள் சந்தை உட்பட ரூ.115.58 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்பணிகளை தொடங்கும் விதமாக ஆய்வு மேற்கொண்டோம்.

சென்னையில் புதிதாக கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பகிர்ந்த பணியிட மையம் ஒன்றை தொடங்க கட்டிட வடிவமைப்பை பார்வையிட்டோம். அதில், படிப்பதற்கு நல்ல போதுமான சூழ்நிலை இல்லாத மாணவர்களுக்கு படிப்பதற்குண்டான இடம், அதேபோல் வீட்டிலேயே இருந்து பணியாற்றக் கூடியவர்களுக்கு, பணி செய்வதற்கு உண்டான தளமும் உருவாக்கப்படுகின்றன. இம்மாத இறுதிக்குள் இந்த மையத்தை முதல்வர் திறந்து வைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மேயர் ஆர்.பிரியா, வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர், முதன்மைச் செயல் அலுவலர் த.அ.சிவஞானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE