தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு: இரட்டை பதிவுகளை நீக்கும் பணி தீவிரம் 

By கி.கணேஷ்

சென்னை: தமிழகம் முழுவதும் புகைப்படம் மற்றும் வாக்காளர் விவரங்களை கொண்டு இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் கள ஆய்வு மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆக.20 முதல் வீடுவீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அக்டோபர் 18-ம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெறும்.

அதன்பின், அக்.29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவ.28-ம் தேதிவரை பெறப்படும். விண்ணப்பங்கள் வரும் டிச.24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இந்நிலையில், தற்போது வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியது: “தற்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, புதிதாக குடியேறியவர்கள், குறிப்பிட்ட முகவரியில் இருந்து மாறியவர்கள். புதிதாக திருமணமாகிச் சென்றவர்கள், வந்தவர்கள், இறந்தவர்கள் என்பது போன்ற விவரங்களைப் பெற்று, அவற்றை உரிய செயலியில் பதிவு செய்வார்கள். மேலும், 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள் விவரங்களையும் பதிவு செய்து கொள்வார்கள்.

இதுதவிர, புகைப்படம் சரியில்லை எனில் அவற்றை மாற்றுவதற்கான பணிகளையும் மேற்கொள்வார்கள். அப்போது, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்வது குறித்தும், விண்ணப்பிப்பது குறித்தும் அறிவுறுத்தி வருவார்கள்.
வாக்காளர்களை நேரில் சந்தித்து விவரங்கள் பெற வேண்டும் என்பதற்காகவே இரண்டு மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிந்து, அக்.29-ம் தேதி முதல் அடுத்த கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும். இதுமட்டுமின்றி, தற்போது மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், மாநிலத்துக்குள், இரட்டை பதிவுகளை நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, புகைப்பட ஒற்றுமை, பெயர், தந்தை பெயர், வசிப்பிடம், பிறந்த தேதி, வயது இவற்றின் ஒற்றுமை அடிப்படையில், கணினி வாயிலாக ஒத்துப்போகும் வாக்காளர்கள் விவரங்கள் எடுக்கப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு ஒருவரது பெயர் இரு வேறு இடங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டு, அவர் விரும்பும் இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் வகையில், மற்றொரு இடத்தில் நீக்கப்படும். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, யாருடைய பெயரையும் உடனடியாக நீக்கிவிடக்கூடாது என்பதை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, முதலில் கடிதம், அந்தக் கடிதத்துக்கு 15 நாட்களுக்குள் பதில் வராத பட்சத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள ஆய்வு ஆகியவற்றுக்கு பின்னர், வாக்காளர் அனுமதி பெற்றே நீக்கம் செய்யப்படும். மாநிலத்துக்குள் இதுபோன்ற பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இவ்வாறான கூடுதல் பதிவுகளை நீக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு வாக்காளர் பதிவுகள் ஆய்வுக்குப்பின், சம்மதம் பெற்று நீக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE