மதுரை: அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான 16 வகையான மருத்துவப் பிரிவு கட்டுமானப் பணிகள் தொடங்கி இரவு, பகலாக நடந்து வருகிறது. 2027-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. ஜெயலலிதா, மதுரை மாவட்டம் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ அமைக்க இடம் ஒதுக்க முடிவு செய்து அதற்கான இடத்தை தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால், எதிர்பாராத வகையில் அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் இடத்தை மாற்ற, அப்போதைய அதிமுக ஆட்சியில் முக்கிய அதிகாரத்தில் இருந்தவர்கள் முயற்சி செய்தனர்.
அதற்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் செங்கிப்பட்டி, செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இறுதியாக, செங்கிப்பட்டியை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினர். ஆனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான விமான நிலையம், ரயில் நிலையம், நான்குவழிச் சாலை போன்றவை மிக அருகில் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கோடிட்டு காட்டியது.
இந்த வசதிகள், மதுரை தோப்பூரில் மிக அருகில் இருந்ததால், மத்திய அரசு மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டது. இதனால், ‘இடம் தேர்வு’ விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கும், அதிமுக அரசுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. எனினும் மத்திய அரசு விடாப்பிடியாக நின்று மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைக்க ஜூன் 2018-ல் தோப்பூரில் இடம் தேர்வு செய்தது. அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து மதுரை ‘எய்ம்ஸ்’க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியது.
» ஒப்பந்தம் போட்ட 10 நாட்களில் மேட்டூர் நீரேற்று புனல் மின் நிலைய திட்ட அடிப்படைப் பணிகள் தொடக்கம்
மக்களவைத் தேர்தல் நெருங்கிய வேளையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தமும் 2021-ம் ஆண்டு மார்ச்சில் செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி வந்தது.
அதன் பிறகு மதுரை ‘எய்ம்ஸ்’ விவகாரத்தில் திமுக - பாஜக அரசுகளின் அரசியல் மோதல் வெடித்ததால் மீண்டும் மதுரை ‘எய்ம்ஸ்’ கட்டுமான பணிகள் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனது. திமுக அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கவே, மத்திய அரசு, ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி கட்டிடம் இல்லாவிட்டாலும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.
ஆனாலும், கட்டுமானப் பணி தொடங்காததால், இந்த திட்டம் வருமா வராதா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், தற்போது ஜைக்கா நிறுவனம், சமீபத்தில் இந்த திட்டத்துக்கான நிதியை ஒதுக்கி டெண்டர்விடப்பட்டு, மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணிகள் கடந்த மே மாதம் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 450 தொழிலாளர்கள், இரவு, பகலாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பகுதி-1, பகுதி-2 ஆகிய இரண்டு கட்டமாக நடக்கிறது. பகுதி-1-ல் முதற்கட்டமாக 13 கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணி தொடங்கி நடக்கிறது. இதை 33 மாதங்களில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவக் கல்வி பிளாக், (academic zone), நர்சிங் அகடமிக் பிளாக், அட்மின் பிளாக், சர்வீஸ் பிளாக், மருத்துவமனை, புற நோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, பட்டமேற்படிப்பு மாணவர்கள் விடுதிகள், எம்பிபிஎஸ் மாணவர்கள் விடுதிகள், நர்சிங் வொர்க்கிங் ஹாஸ்டல் போன்ற 16 வகை மருத்துவப் பிரிவு கட்டிடங்கள் வரவுள்ளன.
பகுதி-2-ல் 16 கட்டிடங்கள் வரவுள்ளன. அதில், ஆடிட்டோரியம், குடியிருப்புக் கட்டிடங்கள், இயக்குநர் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பிணவறை, ஆயுஷ் மருத்துவப் பிரிவு கட்டிடம் போன்ற 16 வகை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த கட்டிடங்களை 18 மாதங்களில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பகுதி-1ல் இடம்பெறும் கட்டிடங்கள் 10.26 லட்சம் சதுர அடியிலும், பகுதி-2ல் இடம்பெறும் கட்டிடங்கள் 13.05 லட்சம் சதுர அடியிலும் கட்டப்படுகின்றன.
கடந்த மே மாதம் கட்டுமானப்பணி தொடங்கியது. இப்பணிகளை 2027-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 450 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இனி இக்கட்டுமானப் பணி தாமதமாக வாய்ப்பே இல்லை. திட்டமிட்டப்படி முடிக்கப்படும்,” என்றனர்.
தாமதத்தால் திட்டமதிப்பீடு உயர்ந்தது! - ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் 870 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பறை கட்டிடம், ஆய்வகக் கூடங்கள், 2,160 கார்கள், 2,090 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமைய உள்ளன.
ஆரம்பத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும்போது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் திட்டமதிப்பீடு ரூ.1,264 கோடியாக இருந்தது. அதன்பின், ரூ.1,624 கோடியாக திட்டமதிப்பீடாக உயர்த்தப்பட்டது. ஜைக்கா நிறுவனம் நிதி வழங்க தாமதம் செய்ததால் கட்டுமானப்பணி தாமதமாகி திட்டமதிப்பீடு ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இது ரூ.2,021.51 கோடியாக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago