ஒப்பந்தம்  போட்ட 10 நாட்களில் மேட்டூர் நீரேற்று புனல் மின் நிலைய திட்ட அடிப்படைப் பணிகள் தொடக்கம்

By கி.கணேஷ்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆக.21-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், மேட்டூரில் கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் தனது நீரேற்று புனல் மின் நிலையத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆக.21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம், ரூ.20,114 கோடி முதலீடு மற்றும் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 3 நீரேற்று புனல் மின் திட்டங்களை நிறுவ, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்நிறுவனம் ஒப்பந்தம் போட்ட 10 நாட்களில் முதல்கட்டமாக, மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின்நிலையம் அமைப்பதற்கான அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளது. குறிப்பாக, மேட்டூரில் பாலமலை மற்றும் நவிப்பட்டி கிராமத்தில் இந்த மின் நிலையம் அமைகிறது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கான கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE