காஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை 

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த பெண் பயிற்சி மருத்துவர் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர், காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பயிற்சி மருத்துவர்களும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷெர்லின் (23) என்ற ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பெண் பயிற்சி மருவத்துவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இவர் ஞாயிறு இரவு திடீரென மருத்துவமனையின் 5-வது மாடிக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த பலர் அவர் விளிம்புக்கு வருவதை பார்த்து சத்தமிட்டுள்ளனர். சிறிது நேரம் மாடியின் விளம்பில் நின்றிருந்த அவரை, அங்கு சென்று மீட்பதற்குள் திடீரென அவர் கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷெர்லின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பொன்னேரிக்கரை போலீஸா் கூறியதாவது: “மாணவி ஷெர்லின் ஏற்கெனவே தனிப்பட்ட சொந்த விவகாரத்தில் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்துள்ளார். அதற்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

இதனிடையே ஷெர்லினின் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூராய்வு நடைபெற்ற காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் அவருடன் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவியர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE