செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் அமெரிக்க நிறுவன ஆலை: சான் பிரான்சிஸ்கோவில் ஒப்பந்தம் கையெழுத்து

By செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் எலெக்ட்ரோலைசர்கள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. தவிர, 39 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், அவற்றில் பணிபுரியும் 26 லட்சம்பணியாளர்கள் என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.

தமிழகத்தில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்,உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்ஃபிங்ஸ் ஹெல்த்கேர், அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை,கோவை, மதுரையில் 4,100 பேருக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, ஆப்பிள், கூகுள்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் உயர் அலுவலர்களை ஆகஸ்ட்30-ம் தேதி சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சான் பிரான்சிஸ்கோவில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் ஆகஸ்ட் 31-ம்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஓமியம் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane) எலெக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. அமெரிக்கா, மெக்சிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் திட்டக் குழாய்களை இந்த நிறுவனம் அமைத்துள்ளது.

இந்த நிலையில், எலெக்ட்ரோலைசர்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஓமியம் நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண் ராய்,தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு,ஓமியம் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆன் பாலன்டைன், தலைமை தொழில்நுட்ப அலுவலர்சொக்கலிங்கம் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்டாலின் இன்று சிகாகோ பயணம்: அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக சான் பிரான்சிஸ்கோ சென்றார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழர்கள் உடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று (செப்.2) சிகாகோ செல்கிறார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தொழில் முதலீட்டுக்கு தமிழகம் வருமாறு அழைப்பு விடுக்கிறார். பல்வேறு தொழிற்சாலைகளை அவர் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7-ம் தேதி சிகாகோவாழ் தமிழர்களை சந்திக்கிறார். பயணத்தை முடித்துக்கொண்டு, 14-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மற்றொரு வெற்றிகரமான நாள். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓமியம் நிறுவனம் மூலம் ரூ.400 கோடி முதலீட்டை பெற்றுள்ளதுடன், 500 பேருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளோம். இது பசுமை எரிசக்தி உற்பத்திக்கான சூழலமைப்பை வளர்த்தெடுப்பதிலும், வளங்குன்றா எதிர்காலத்துக்கான பங்களிப்பிலும் குறிப்பிடத்தக்க நகர்வாக அமைந்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்