“நீ இல்லாத தெருக்களில் உன் உடன்பிறப்புகளின் குருதி, ஆறாய் ஓடுகிறது. உயிரற்ற உடல்களை பழந்துணி போல் இழுத்து வருகிறார்கள். கிடத்தப்பட்ட உடல்களை வட்டமிடும் கழுகுகள், உணர்வற்ற உடலில் தன் பங்கு தேடும் ஓநாய்கள். தெருவெங்கும் இரத்தம்.சாதி மதம் கடந்து கலந்து காய்ந்த இரத்தம். ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை கைகள் சோர்ந்து நம்பிக்கை இற்று விழும் முன் வா! உன் கரகரத்த குரல் வாளெடுத்து எழுத்துக் கேடயம் ஏந்திவா! வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் இரட்சகனுக்காக.”
தன் தலைவனாகவும் தந்தையாகவும் விளங்கும் திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எழுதிய கவிதை வரிகள் இவை.
திமுக தலைவராக, முதல்வராக, அரசியல் சாணக்கியராக கருணாநிதியின் ஆளுமையை பொதுத் தளத்தில் எத்தனையோ முறை நாம் வியந்திருப்போம். திமுகவினர் மட்டுமல்லாமல், இன்றைய காலகட்டத்தில் அவர் செயல்பாட்டில் இருந்திருக்கக் கூடாதா என அரசியல் கட்சிகளைத் தாண்டி பலரும் யோசிக்கும் மிக முக்கியமான தருணம் இது. பலரது எதிர்பார்ப்பையும் கடந்து இந்த ஓய்வு காலம் அவருக்கு எவ்வளவு முக்கியம்? அதன்மூலம் தமிழகம் எதனை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுவதும் அவசியமாகிறது. அதற்கான பதில்களை மட்டுமல்லாமல், பலவற்றை மாநிலங்களவை திமுக உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி இந்த பேட்டியில் விளக்கியிருக்கிறார். தந்தையாகவும், தலைவராகவும் கருணாநிதியின் செயல்பாடுகள், வியக்க வைக்கும் விஷயங்கள், வருத்திய நிகழ்வுகள், பலம், பலவீனம், இந்த ஓய்வு காலத்தில் அவரின் எண்ண ஓட்டங்கள், அவரின் மௌனம் தரும் வெறுமை என பலவற்றை தி இந்துவிடம் பகிர்ந்துகொண்டார்.
திமுக தலைவர் கருணாநிதி என்றதும் நினைவுக்கு வருவது அவரின் அசர வைக்கும் உழைப்பு, வசீகரிக்கும் பேச்சாற்றல். அப்படிப்பட்டவர் இன்றைக்கு ஓய்வெடுப்பதையும், பேசாமல் இருப்பதையும் ஒரு மகளாக எப்படி பார்க்கின்றீர்கள்? ஒரு தொண்டராக எப்படி பார்க்கின்றீர்கள்?
ஒரு மகளாகவும், தொண்டராகவும் அவரது ஓய்வு எனக்கு பெரிய இழப்புதான். ஒருமுறையாவது உடன்பிறப்பே என அழைக்க மாட்டாரா என்பது தான் திமுக தொண்டர்களின் ஏக்கமாக இருக்கிறது. அரசியலைத் தாண்டி பல கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் அவர் நலம்பெற வேண்டும் என விரும்புகின்றனர். இத்தனை ஆண்டுகள் அவரைச் சுற்றியே அரசியல் இயங்கியிருக்கும் நிலையில், இப்போது பேசாமல் இருப்பதும் எழுதாமல் இருப்பதும் ஒரு நிசப்தத்தை உருவாக்கியுள்ளது. அவரது வயதையும் தாண்டி அந்த நிசப்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு மகளாக நான் அவரிடம் பலவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எவ்வளவு வேலையாக இருந்தாலும் நான் உட்பட அனைத்துத் தொண்டர்களிடமும் அக்கறையோடு கவனமாக இருப்பார். தொண்டர்கள் இரவு நேரங்களில் பயணிக்கக் கூடாது என்பதை தொடர்ந்து சொல்லுவார்.
பல மாவட்டச் செயலாளர்கள் சென்னை வந்துவிட்டு இரவு நேரங்களில் ஊர் திரும்ப வேண்டியிருந்தால் அப்பாவிடம் சொல்லக் கூடாது என்றுதான் கூறுவார்கள். அதேபோல், இரவு நேரங்களில் காரில் பயணம் செய்து சென்னை வரும் தொண்டர்களை கண்டிப்பாக அவர் கடிந்து கொள்ளுவார். 2ஜி வழக்குக்காக பலமுறை நான் இரவு நேரங்களில் டெல்லிக்கு விமான பயணங்கள் மேற்கொள்வது உண்டு. அப்போதெல்லாம், பத்திரமாக சென்றுவிட்டாயா? என போனில் கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருமுறை, நான் என்ன சின்னக் குழந்தையா? எனக்கு போகத் தெரியாதா? என கிட்டத்தட்ட சண்டை போடும் அளவுக்குக் கூட கேட்டேன். ஆனால், இப்போது டெல்லி விமான நிலையத்தில் ஒவ்வொரு முறை இறங்கும்போதும் நான் ஒருவித வெறுமையை உணர்கிறேன். அவர் என்னிடம் பத்திரமாக சென்றுவிட்டாயா?, என கேட்க மாட்டாரா என தோன்றுகிறது. அவர் பேசாத, எழுதாத, செயல்படாத இந்த காலம் தரும் வெறுமை அத்தனை பேரையும் சூழ்ந்திருக்கிறது.
நீங்கள் அரசியலுக்கு வந்தபோது உங்களுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் நினைவிருக்கிறதா?
எனக்கான வார்த்தைகள் என்று அவர் சொன்னதாக தெரியவில்லை. ஆனால், சுற்றியிருக்கும் அனைவருக்கும் அவரின் நிலைப்பாடு, எதிர்பார்ப்புகள் என்ன என்பது தெளிவாக தெரியும். ஒரு விஷயத்தில் அவரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து திமுகவின் அடிமட்ட தொண்டர் வரை அனைவருக்கும் தெரியும். கொள்கைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத தலைவர் அவர். தான் நம்பிய கருத்துகளை, சுயமரியாதை கொள்கைகளை சொல்லத்தான் பேச்சு, எழுத்து, திரைப்படம் என அனைத்து ஊடகங்களையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
தன் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்துகளை எப்படி எடுத்துக்கொள்வார்?
யாருக்காவது கருத்து வேறுபாடு இருக்கிறதென்றால் அதனை அவரிடம் சொல்ல முடியாது என்ற நிலைமை என்றைக்குமே இருந்ததில்லை. யாராக இருந்தாலும் தன் கருத்துகளை எடுத்துச் சொல்லி விவாதிக்கக் கூடியவர் அவர்.
நீங்கள் திமுக தலைவரின் கருத்துகளிடம் இருந்து வேறுபட்டு நின்ற தருணங்கள் உண்டா?
நிறைய விஷயங்கள் உள்ளன. பல காரசாரமான விவாதங்கள் அவர் முன்னால் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவற்றை விவரித்துச் சொல்ல வேண்டும் என விரும்பவில்லை. சாதாரணமாக தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் எங்களுக்குள்ளும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் பேசி கடக்கக் கூடியவர் அவர்.
அவரிடம் இருந்து நீங்கள் பெற்ற பாராட்டுகளில் மறக்க முடியாதது?
செம்மொழி மாநாட்டில் பல பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தன. அப்போது மேடையில் ஏறும்போது பின்னால் இருந்த என் கையைப் பற்றி முத்தம் கொடுத்து நன்றி என கூறினார். அதனை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது. அதனை ஒரு பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அது தவிர்த்து பல நேரங்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும்போது பாராட்டுவார். ஆனால், அவருக்குக் காட்டாமல் ஏதேனும் கட்டுரை பிரசுரமானால் வருத்தப்படுவார். நான் தொடர்ந்து எழுதுவதில்லை என்பது என் மீது அவருக்கு இருந்த குறை. நான் மட்டுமல்லாமல் அனைவரையும் பாராட்டக் கூடிய, திறமைகளை தட்டிக்கொடுக்கக்கூடிய, அனைவரும் நன்றாக செயல்பட வேண்டும் என நினைக்கும் மனிதர்.
அரசியலில் உங்களின் செயல்பாடுகளில் எந்தெந்த இடங்களில் கருணாநிதியின் தாக்கம் இருந்தன, இருக்கின்றன?
அவரின் தாக்கம் இல்லாமல் எனது செயல்பாடு என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை. ஒரு கூட்டம் நடக்கிறதென்றால் அதில் நாற்காலிகள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது முதல் அனைத்தையும் கவனிப்பார். ஒரு நாற்காலி அமைப்பதைக் கூட முதல்வர் வந்து பார்ப்பதெல்லாம் திமுகவில் தான் நடக்கும் என அனைவரும் கிண்டல் செய்வர். இப்படி சின்ன, சின்ன விஷயங்களைக் கூட தவிர்க்காமல் அவரால் முழுமையாக செயல்பட முடியும். அவற்றையெல்லாம் அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு காலத்திலும் பிரச்சினைகள் வெவ்வேறு வடிவங்களில் வருகின்றன. ஆனால், அடிப்படையில் இருக்கக்கூடிய மனித உரிமைகள், சுய மரியாதை, சமூக நீதி ஆகியவை தான் எல்லா காலத்திலும் நடைபெற்ற போராட்டங்களுக்கு அடிப்படை. இந்த இரண்டும் சுய மரியாதை இயக்கமும், தலைவரும் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான். இவை இல்லாமல் யாரும் திமுகவில் செயல்படுவதில் அர்த்தமே இல்லை.
ஒரு அரசியல் தலைவராக கருணாநிதியிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்?
சுயமரியாதையும் மனித உரிமையும் தான் எல்லாவற்றிற்கும் அடித்தளம். அவர் சொல்லிக் கொடுத்த சமூக நீதியை எடுத்துச் செல்வதற்காகத் தான் திமுக இருக்கிறது.
90 வயதைக் கடந்தும் அவர் உழைத்த தருணங்களில் நீங்கள் அசந்துபோன தருணம் உண்டா?
70 வயதுகளிலேயே அவர் அதிகம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என அனைவரும் கூறி அது பயனற்று போனது. சிறிது நாட்களில் அப்படி சொல்வதே ஜோக் மாதிரியாகி விட்டது. உடல்நிலை சரியில்லை என்றால் ஒருநாள் ஓய்வெடுப்பார். மறுநாள் அறிவாலயத்திற்கு செல்லவில்லையென்றால் அதுதான் அவருக்கு நோயாக மாறும். தன் நோயைவிட செயல்படாமல் இருப்பதுதான் அவரை அதிகமாக அழுத்தும். மருத்துவர்களும் ஒருகட்டத்தில் அதைத்தான் சொன்னார்கள். மக்கள், தொண்டர்களை சந்திக்காமல், அறிவாலயத்திற்கு செல்லாமல், முரசொலி பதிப்பை சரிபார்க்காமல் அவரால் இருக்க முடியாது. அவர் ஓய்வில் இருப்பது தான் ஆச்சரியத்தைத் தரும்.
ஒருமுறை அறிக்கை ஒன்றை படித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் காலில் அவ்வப்போது வலி ஏற்படும். அதனால் இடையிடையே வலியால் துடித்துக் கொண்டிருந்தார். வலி வரும்போது நிறுத்தச் சொல்வார். சில நொடிகளில் அந்த வலி கடந்ததும் மீண்டும் படிக்கச் சொல்வார். நான் மிகவும் ஆச்சரியப்பட்ட தருணம் அது.
தன்னுடைய வாழ்வில் அவர் மிகவும் துன்பப்பட்ட விஷயங்கள்...
தன்னைச் சுற்றி இருக்கக்கூடியவர்களின் மறைவு, நண்பர்களின் இறப்பு அவரை மிகவும் பாதிக்கக்கூடிய விஷயம். தேர்தல் தோல்விகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். அருகில் இருக்கக்கூடிய மற்றவர்களுக்கு அந்த வலி அதிகம் பாதிக்காத வகையில் சூழலை லேசானதாக மாற்றிவிடுவார்.
அவரது பலம், பலவீனம் என்னவென்று கருதுகிறீர்கள்?
பலம், பலவீனம் இரண்டுமே எல்லோரையும் அவர் எளிதில் மன்னித்து விடுவது தான்.
திமுக தலைவரின் மகளாக நீங்கள் அடைந்த பெருமையாக எதை நினைக்கின்றீர்கள்?
நான் அவரது புத்திசாலித் தனத்திற்கு, படிப்பறிவிற்கு பெரிய ரசிகை. அவரின் சிந்தனைகள், வாதத் திறமை, நகைச்சுவை உணர்வு, மொழி மீதான ஆளுமை அனைத்தும் வியக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட அறிவாளியோடு மகளாகவும், தொண்டராகவும் பணியாற்றக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்ததே பெருமையாக கருதுகிறேன். செயல்பாடுகளைத் தாண்டி அவரின் ஆளுமையும், அறிவும், ஆழ்ந்த வாசிப்பும், மதிநுட்பமும் அவரை தலைவராக என்னைக் கவர்ந்த விஷயங்கள்.
2ஜி வழக்கில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகளால் அவர் என்ன மாதிரியான உணர்வுகளுக்கு ஆளானார் என்பதை நினைவுகூர முடியுமா?
வழக்கமாக ஒரு மகள் அத்தகைய பிரச்சினைகளுக்கு ஆட்படும்போது மற்ற தந்தைகள் எப்படி பாதிக்கப்படுவார்களோ, அதைப் போலத்தான் அவரும் வருத்தப்பட்டார். கலைஞர் தொலைக்காட்சியில் என்னை பங்குதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமில்லாமல் இருந்தேன். ஆனால், அவருக்காக நான் ஏற்றுக்கொண்டு, அதன் பின்னான பிரச்சினைகளால் அவர் பெரும் குற்றவுணர்வுக்கு ஆளாகினார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், பிரச்சினைகள் குறித்து எடுத்துச் சொல்லும்போது அதனை அவர் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்?
அவரால் பேச முடியவில்லை. சில நேரங்களில் சிலவற்றை சொல்லும்போது முக பாவனைகள், ஓரிரு வார்த்தைகள் மூலம் எங்களுக்கு எதையேனும் உணர்த்துவார். அதனைப் புரிந்துகொள்ள முடியும். கட்சியைப் பொறுத்தவரையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். ஆனால், எல்லா முக்கிய முடிவுகளையும் தலைவரிடம் தெரிவித்து விட்டுதான் செய்வார்.
அவர் ஓய்வாக இருக்கும் இந்த காலத்திலும் அவரைப் பற்றிய தொடர் உரையாடல்கள் நீள்வதை எப்படி பார்க்கின்றீர்கள்?
அவரின் ஆளுமை, ஆழ்ந்த வாசிப்பு, அறிவு, செயல்பாட்டுத்திறன் ஆகிய அனைத்தும் தான் இன்றளவும் பல தலைவர்கள் காட்டும் மரியாதைக்குக் காரணம். அந்தளவுக்கு தனக்கான இடத்தை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தியா தவிர்த்து உலகம் முழுவதிலும் நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு அதுகுறித்த கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் வாழ்நாளெல்லாம் அறிவுத்தேடல் கொண்டிருந்த தலைவர் அவர். தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தினை புரிந்துகொள்ள வேண்டும், மாற்றங்களைப் புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் எப்போதும் இருக்கும். உலகின் பல இடங்களில் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் திருநங்கைகளுக்காக தமிழகத்தில் 7-8 ஆண்டுகள் முன்பே நல வாரியம் ஆரம்பித்த, மனதளவில் இளைஞராக இருக்கக்கூடியவர். தமிழ்நாட்டில் அவர் கொண்டு வந்த பல மக்கள் நலத்திட்டங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பல மாநில அரசுகள் செயல்படுத்தியிருக்கின்றன.
இன்றளவும் பெரும் விமர்சனங்களுக்கும், தூற்றுதல்களுக்கும் ஆளான தலைவராக கருணாநிதி இருக்கிறார். அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்கள். இந்த விமர்சனங்களையெல்லாம் அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?
உண்மையை தெரிந்துகொண்டே வேண்டுமென்றே சிலர் விமர்சனம் செய்வார்கள். அம்மாதிரியான சமயங்களில் அவர்கள் இவ்வளவு கீழே இறங்கி பேசுகிறார்களே என்ற வருத்தம் இருக்கும். ஆனால், விமர்சனங்களை எப்போதும் நேர்மையாக எதிர்கொள்வார். தனிப்பட்ட ரீதியாக விமர்சனங்களை எடுத்துக்கொள்வதில்லை. அவர் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் கூட மறுமுறை அவரிடம் சாதாரணமாக பேச முடியும். அவர்களை பழிவாங்க வேண்டும் என நினைக்க மாட்டார். ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால் அதற்கு எப்போதும் மரியாதை கொடுப்பார். முதல்வராக இருந்தபோதும் அரசின் மீது ஊடகங்கள் கூறும் குறைகளை உண்மையானால் சரி செய்வார்.
மாநில உரிமைகள் பல பறிபோய்க் கொண்டிருக்கும் சூழலில் இன்றைக்கு கருணாநிதி என்ற ஆளுமையின் தேவை என்ன என்பதை ஒரு பத்திரிக்கையாளராக சொல்லுங்கள்...
மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் அவர். இன்றைக்கு மத்திய அரசு எடுக்கும் பல முடிவுகளை திமுக தலைவர் உடல் நலத்தோடு இருந்திருந்தால் தைரியமாக எடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே. பல முக்கிய பிரச்சினைகளில் சுற்றியிருக்கும் அனைத்துக் கட்சிகளின் முடிவுகளில் கவனத்தை திருப்பக் கூடியவராக எப்போதும் இருந்திருக்கிறார். பலரது கருத்துகளை கட்டமைக்கக் கூடியவராக இருந்திருக்கிறார். பெரியார், அண்ணா ஆகிய தலைவர்கள் தெளிவான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதன்படி நடந்தாலே தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்ற முடியும், காப்பாற்ற வேண்டும்.
கேரளா, ஆந்திரம், மேற்குவங்கம் என இந்தியாவின் பல மாநிலங்களில் இன்று மாநில உரிமைகள் பேசுபொருளாகி இருக்கிறது. இப்போது அவர் செயல்பாட்டில் இருந்திருந்தால் அதற்கெல்லாம் தலைமை தாங்கக்கூடியவராக இருந்திருப்பார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடையாளங்கள் வேண்டும் என அவர் சொன்னபோது அது காலத்தைத் தாண்டிய ஒன்றாக இருந்தது. ஆனால், இன்றைக்கு பல கருத்தியல்கள் அவர் முன்பு சொன்னதைச் சுற்றித்தான் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
உங்களின் சிறைவாச நாட்கள், இப்போது அவரின் ஓய்வு நாட்கள் இவை இரண்டில் எந்த காலத்தில் திமுக தலைவரை அதிகமாக மிஸ் செய்கிறீர்கள்?
நிச்சயமாக இப்போது தான் அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்.
தந்தை, தலைவர் என்பதைத் தாண்டி கருணாநிதி என்பவர் உங்களுக்கு யார்?
காலங்களைக் கடந்து தன் அடையாளங்களை நிலைநிறுத்தியிருக்கும் மாபெரும் ஆளுமை. என்னை பல விஷயங்களில் பாதித்திருக்கக் கூடிய சிந்தனையாளர், தத்துவவாதி, அறிவாளர்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago