மது, போதை ஒழிப்பு மாநாடு: கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சியில் நடக்கவுள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டுக்கு சில தரப்பில் இருந்து எதிர்ப்பு வரக்கூடும்.அதற்காக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

விசிக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்.2-ம் தேதி மதுமற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் சிலஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: அண்மையில் விசிக கொடியை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை, போக்குவரத்து காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தலையிடலாம். ஆனால் தாசில்தார் அளவிலான அதிகாரிகள் தலையிட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறாக பல்வேறுஎதிர்ப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். இவையெல்லாம் தெரிந்தும், சகித்துக் கொண்டும்தான் கூட்டணியில் இருக்கிறோம்.

அது தொகுதி ஒதுக்கீட்டுக்காக அல்ல. தமிழகத்தை சனாதனம் நெருங்கிவிடக் கூடாதுஎனும் ஒற்றை நோக்கத்துக்காக மட்டுமே. இதேபோல், மது மற்றும்போதை ஒழிப்பு மாநாட்டுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல எதிர்ப்புகள் வரும்.மாநாட்டுக்காக வெளியில் இருந்து நிதி வசூலிக்க வேண்டாம். அதிலும் பிரச்சினைகள் வரலாம். கட்சியினரே தங்களால் முயன்றவற்றை அளித்தால் போதுமானது.

வரும் எதிர்ப்புகளைக் கண்டு உணர்ச்சிவயப்படக் கூடாது. அனைத்தையும் சட்டரீதியாக அறிவுப்பூர்வமாக கையாள வேண்டும். கூட்டணி தலைமையை சங்கடப்படுத்தும் வகையில் கருத்துகள் வேண்டாம். பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாத சூழலில் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE