சாமந்திப்பூ விலை கடும் வீழ்ச்சி: உற்பத்திச் செலவை எடுக்க முடியாமல் பூ விவசாயிகள் தவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சாமந்திப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் சாகுபடி செய்த உற்பத்திச் செலவை கூட எடுக்க இயலாமல் பூ விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி, திருக்கனுர், கூனிச்சம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியான மதுரப்பாக்கம், குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் குண்டுமல்லி, ஆம்பூர் மல்லி, சம்மங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், சாமந்திப்பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் சாமந்தி பூ விளைச்சல் அதிகரித்ததால் சந்தைகளில் பூக்களின் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக சம்மந்தி பூ கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் சாமந்திப்பூ சாகுபடி செய்துள்ளனர். இதன் காரணமாக சாமந்திப்பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் விலை கடுமையாக குறைந்துள்ளது.

கிலோ ரூ.100-க்கு விற்பனையான நிலையில் தற்போது 35 கிலோ கொண்ட மூட்டை சாமந்திப்பூவை ரூ.100 க்கு கீழ் தான் கேட்கின்றனர். இதனால், சாகுபடி செய்த பணத்தைக் கூட எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளோம்' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE