2026 தேர்தலில் அதிமுக ஒருங்கிணைந்து ஆட்சியமைக்கும்: ஓபிஎஸ் நம்பிக்கை

By த.அசோக்குமார்

தென்காசி: வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக உறுதியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக உறுதியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை நிறுவும். சென்னையில் பூலித்தேவன் முழுஉருவ வெண்கல சிலையை அமைக்க தமிழக அரசிடம் எடுத்துச் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தவுடனேயே எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளோம். எனது மகன் விஜய் கட்சியில் சேரப் போவதாக கூறுவது தவறான செய்தி. திட்டமிட்ட சதி. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பூலித்தேவன் மாளிகை என பெயர் இருந்து அது அகற்றப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பெயரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் எடுக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். சென்னையில் கார் பந்தயம் நடத்துவது தவறு என்று சொல்வது நல்லதல்ல. இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE