தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

By ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 12.30 முதல் 2.30 மணிக்குள் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்துக்கு அருகே கரையை கடந்தது. இதனால், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 3-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 5 செ.மீ, சின்கோனாவில் 4 செ.மீ, வால்பாறை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தலா 3 செ.மீ, தஞ்சாவூர் மாவட்டம் நெய் வாசல் தென்பாதி, வெட்டிக்காடு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி, அரியலூர் மாவட்டம் திருமானூர், கோவை மாவட்டம் சோலையார், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் 5ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE