தமிழகத்துக்கு புதிய 2 வந்தே பாரத் ரயில்கள் - நேர அட்டவணை, கட்டணம் என்ன? 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 வந்தே பாரத் ரயில்களின் சேவை குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இதேபோல் மதுரை - பெங்களூரு இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்.2-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் பொருத்தவரை, எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் (20627) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை அடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு இந்த ரயில் (20628) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூரை வந்தடையும். சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு சேர்கார் கட்டணம் ரூ.1,760. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.3,240. உணவுக் கட்டணம் இதில் அடங்கும்.

இதேபோல் மதுரை - பெங்களூருவுக்கு மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு ரயில் (20671) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டை அடையும். மறுமார்க்கமாக, பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் (20672), அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை அடையும். இந்த ரயிலில் உணவுக் கட்டணம் உட்பட சேர் கார் கட்டணம் ரூ.1,575. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,865 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி

பிரதமர் பேசியது என்ன?: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத்ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் உட்பட பலமாநிலங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் ,சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மீரட் - லக்னோ ஆகிய வழித்தடங்களில் 3 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில்களை டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, மதுரை, லக்னோ ஆகிய இடங்களில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன.

புதிய ரயில்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும்போது, “தமிழகத்தில் ஏற்கெனவே 6 வந்தே பாரத் ரயில்களுடன் தற்போது 2 புதிய வந்தே ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில் கள் நின்று செல்லும் வகையில் சிறிய ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படும். சென்னை - நாகர்கோவில் ரயில் மாணவர்கள், விவசாயிகள், ஐ.டி. பணியாளர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக விளங்கும். மேலும், சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையிலும் அமையும்.

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு தென் மாநிலங்களில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன. தென் மாநிலங்கள் நிறைய திறமைகள் உள்ள நிலப்பகுதியாக, ஆதாரங்கள் நிறைந்ததாக வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதியாக விளங்குகின்றன. தமிழ்நாட்டின் மேம்பாட்டோடு ஒட்டுமொத்த தென் இந்தியாவும் வளர்ச்சி அடைவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

மத்திய அரசு வளர்ச்சிக்கு அளிக்கும் முன்னுரிமையை ரயில்வே துறை மேம்பாட்டின் மூலம் அறியலாம். தமிழ்நாட்டுக்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6,000 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2014-ம்ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 7 மடங்கு அதிகம். அதேபோல் கர்நாடகாவுக்கும் பட்ஜெட்டில் ரூ.7,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் கடந்த 2014-ம் ஆண்டைவிட 9 மடங்கு அதிகம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE