தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு: பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீனவர் பிரச்சினை, போதைப்பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இருவரும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை ஆலோசித்தனர்.

வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதால், அங்குள்ளவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் ஜவுளித்தொழிற்சாலைகளில் பணியில் சேருவதற்கு முயன்று வருவதாகவும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார். அதேபோல், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இவை குறித்தும் ஆளுநருடன் அஜித் தோவல் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் மாளிகை, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு கொழும்பு பாதுகாப்பு மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், வங்கதேசம் மற்றும் செஷல்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE