விடுதியில் பாலியல் அத்துமீறல்: விசாரணைக் குழு அமைக்கிறது திருச்சி என்ஐடி நிர்வாகம்

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: விடுதி மாணவியிடம் பாலியல் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக, விசாரணைக் குழு அமைக்கும் பணியில் என்ஐடி நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது.

திருச்சி என்ஐடி நிறுவனம் துவாக்குடியில் இயங்கி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனத்தில் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்குவதற்காக 25 விடுதிகள் உள்ளன. அதில் ஒன்றான ஓபல் விடுதியில் இன்டர்நெட் சேவைக்காக கேபிள் ஒயர்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஆக.29-ம் தேதி கேபிள் ஒயர் பொறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளர் கதிரேசன், விடுதி அறையில் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இது குறித்து மாணவி விடுதி வார்டன் பேபியிடம் கூறியபோது, ஆடைகளை ஒழுங்காக அணிந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்று அந்த மாணவிக்கு அறிவுரை கூறியுள்ளார். இதையடுத்து, மாணவ, மாணவிகள் கொதிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கதிரேசனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். மேலும், மாணவர்களிடம் விடுதி வார்டன் பேபி மன்னிப்புக் கேட்டதை அடுத்து மாணவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், விடுதி தலைமை காப்பாளராக (வார்டன்) பொறுப்பு வகித்து வந்த இஇஇ இணைப்பேராசிரியர் மகேஸ்வரி உள்ளிட்ட நான்கு காப்பாளர்கள் தங்களுக்கு அப்பொறுப்பு வேண்டாம் என திருச்சி எனஐடி இயக்குநர் ஜி.அகிலாவுக்கு கடிதம் கொடுத்ததாகவும், தற்காலிக பெண் பணியாளர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது.

இது குறித்து என்ஐடி நிர்வாகத்தினர் கூறும்போது, ‘இதுவரை யாரும் எந்த கடிதமும் தரவில்லை. யாரையும் பணி நீக்கம், பணியிடை நீக்கம் செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். விசாரணைக் குழு அமைக்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அக்குழுவின் விவரங்கள் செப்.2-ம் தேதி தெரிவிக்கப்படும்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE