3 ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார்: சென்னை விழாவில் ஆளுநர் பங்கேற்பு

By எம். வேல்சங்கர்

சென்னை: சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 3 வந்தே பாரத் ரயில் ரயில் சேவைகளை பிரதமர் மோடி சனிக்கிழமை (ஆக.31) தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார்.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் ஓடும் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்- லக்னோ இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி புதுடெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இவற்றில் ஒரு ரயிலான சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பேசியது: “இன்றைய நாளில், மூன்று வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. இவற்றில் இரண்டு வந்தே பாரத் ரயில் நமக்கு பரிசாகும். பிரதமரின் இதயத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மேலும்,பிரதமரின் இதயத்தில் தமிழ் மொழி, தமிழ் கலாசாரமும் வாழ்கிறது. இதற்கு ஒரு சான்றே இந்த புதிய வந்தே பாரத் ரயில். தமிழ் கலாசாரம், மொழி ஆகியவற்றை உலக அளவில் பிரதமர் மோடி எடுத்துச் சென்றுள்ளார்.

வரும் 2047-ம் ஆண்டு நாட்டை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு. கடந்த 10 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் நாம் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இருப்போம். இது புதிய இந்தியாவின் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் உறுதியை குறிக்கிறது. சாலைகள், ரயில்கள், துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி பங்களிப்பதால், இத்திட்டங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன” என்றார்.

விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியது: “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் வரலாற்று சிறப்பு மிக்க புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னையை மையமாக வைத்து வந்தே பாரத் ரயில்கள் பல இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கி வருகிறது. கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி தமிழக ரயில்வே திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

விழாவில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE