ஹெச்.ராஜா தலைமையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு: அண்ணாமலை லண்டன் சென்ற நிலையில் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச அரசியல் கல்வி பயிலஅண்ணாமலை லண்டன் சென்றநிலையில், கட்சிப் பணிகளை கவனிக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட ‘தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் கல்வி பயிலுவதற்காக 28-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு 3 மாதம் தங்கியிருந்து, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, பாஜக தலைமையிடம் முறையான அனுமதி பெற்று சென்றுள்ள அண்ணாமலை, டிசம்பர் மாதம் இறுதிக்குள் சென்னை திரும்ப இருக்கிறார்.

அண்ணாமலை லண்டன் சென்றதால், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பாஜகவினரிடையே நிலவி வந்தது. இதில் பலரின் பெயர்களும் அடிப்பட்டன. ஆனால், அண்ணாமலை, லண்டனில் இருந்தபடியே கட்சிப்பணியை கவனித்துக் கொள்வார் என்றும், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மாநிலத் தலைவராக அவர்தான் தொடருவார் என்றும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அடுத்த 3 மாதங்கள் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சிப் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழுவை தேசிய தலைமை அமைத்துள்ளது. இதுதொடர்பாக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு நடைபெறும் கல்விபயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். எனவே, பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா வழிகாட்டுதல்படி, மாநில தலைவர் இல்லாதபட்சத்தில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது. இதில், மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொது செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராமசீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இடம் பெறுவர்.

இந்த ஒருங்கிணைப்புக் குழு,மாநில மைய குழுவுடன் கலந்துரையாடி, கட்சி நடவடிக்கைகள் குறித்துஎந்த முடிவையும் எடுக்கும். ஒருங்கிணைப்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களின் செயல்பாடுகளைக் கவனிப்பார்கள். இதுமாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரால் முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்: ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கமலாலயத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது: பிரதமர் மோடிக்கும், அகிலஇந்திய தலைவர், அமைப்பு பொதுச் செயலாளர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. கட்சி தலைமை எதிர்பார்க்கும் விதத்தில், தமிழகத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த குழு வழிநடத்தும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE