எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு; விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்புக் வழக்கு விசாரணைக்கு, தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரூர் குன்னம்பட்டியில் 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக, குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, கரூர் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், அவரது சகோதரர் சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உதயகுமார், சேகருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் தேடப்பட்டு வரும் சேகரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், "எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை தொடங்க, கடந்த ஆண்டே தமிழக ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால்,ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் ஒப்புதல் அளித்ததும், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணை தொடங்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE