ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் தொழில் புரிய தடை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை மற்றும் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதல் வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, எழும்பூர் நீதிமன்ற வளாகத்துக்குள் இரு பிரிவாக மோதிக் கொண்டதாக பதியப்பட்ட வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் கொடுங்கையூர் செந்தில்நாதன், சக்திவேல், தினேஷ்குமார், அயனாவரம் விஜயகுமார், ராயபுரம் விமல் ஆகியோர் வழக்கறிஞராக தொழில் புரிய தடை விதிக்கப்படுகிறது.

இதேபோல, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள வழக்கறிஞர்கள் வண்ணாரப்பேட்டை கே.ஹரிஹரன், கடம்பத்தூர் கே.ஹரிதரன், மணலி சிவா, வியாசர்பாடி அஸ்வத்தாமன் ஆகியோர் வழக்கறிஞராக தொழில் புரிய தடை விதிக்கப்படுகிறது.

விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தராஜன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதேபோல முகநூலில் அவதூறு பதிவுகளை வெளியிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மணியரசனும் வழக்கறிஞராக தொழில் புரிய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE