சென்னை ஃபார்முலா-4 பார்க்க பிரத்யேக பயணச் சீட்டு: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

By கி.கணேஷ்

சென்னை: சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நிகழ்வை பார்க்க ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ க்யூஆர் பயணச் சீட்டு மூலம் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்நிகழ்வுக்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ ‘க்யூ ஆர் பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.

பேடிஎம் இன்சைடர் (Paytm Insider) மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாஸ் பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்று திரும்ப முடியும்.

நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான ‘க்யூஆர்’ குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.பேடிஎம் இன்சைடர் மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களுக்கும் இந்த சலுகை கிடையாது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE