தென்காசியில் பருவமழை தீவிரம்: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும். இதனால் சாரல் சீசன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் சில நாட்கள் சாரல் மழையும், சில நாட்கள் வறண்ட வானிலையும் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து சாரல் மழையின் தீவிரம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஒரு சில நாட்கள் மட்டுமே லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணைப் பகுதியில் 32.80 மி.மீ., செங்கோட்டையில் 19 மி.மீ., அடவிநயினார் அணையில் 16 மி.மீ., கருப்பாநதி அணையில் 1.50 மி.மீ. மழை பதிவானது. இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழையும் பெய்துவருகிறது.

மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் சுற்றலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மீண்டும் சாரல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE