சென்னை கோடம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதாளசாக்கடை திட்டப் பணிகளால், சாலைகள்படுமோசமாக மாறியுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக சூளைமேடு இருக்கிறது. இதை சுற்றி கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகள் இருக்கின்றன.
இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்புகளில் இருந்து பாதாள சாக்கடைகள் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றன.
இங்கு பல்வேறு பகுதிகளில் பாதாளசாக்கடைகள் அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளன. இதனால், பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடைகள் தேமடைந்துள்ளன. மேலும்,வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரின் அளவும் பன்மடங்கு அதிகரித்ததால், கழிவுநீர் அடிக்கடி சாலைகளில் வெளியேறுகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, சூளைமேடு, கோடம்பாக்கத்தில் புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகள் படுமோசமாக மாறி, வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கோடம்பாக்கம் புலியூர் 1-வது பிரதான சாலையில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு முன்பாக இயந்திர நுழைவுவாயில் (Machine Hole) அமைக்கப்பட்டுள்ளது. இவை சாலையின் அளவுக்கு சமமாக இல்லாமல் அதை விட ஒரு அடி அல்லது 2 அடி உயரமாகவும், சில இடங்களில் அதன் அருகே பெரிய பள்ளமும் காணப்படுகிறது. இதுபோல, வன்னியர் தெருவில் பிரதான சாலையில் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இப்பகுதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுபோல, சூளைமேட்டில் திருவள்ளுவர் புரம், அமிர்ஜா தெரு, பாஷா தெரு உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, இந்த இடங்களில் சாலைகள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக, சூளைமேடு பாஷா தெருவில் உள்ள சாலையை 3 மாதங்களுக்கு முன்பு தோண்டினர். இப்போது வரை அந்த பகுதியில் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் புலியூர்சாலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மதன் கூறியதாவது: கோடம்பாக்கத்தில் புலியூர் 2-வது பிரதான சாலையில் 3 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், இயந்திர நுழைவுவாயில் (Machine Hole) அமைக்கப்பட்டது.
இவை சாலையுடன் சமமாக இல்லாமல் மேடு பள்ளமாக இருக்கிறது. இதுபோல, பல இடங்களில் சீராக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். உடனடியாக, இந்த சாலையை சீரமைக்க வேண்டும். பல இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
சூளைமேட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கூறியதாவது: பாஷா தெருவில் 3 மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை திட்டத்துக்காக இச்சாலை தோண்டப்பட்டது. இப்போது,வரை பணி நடைபெற்றுவருகிறது. இந்த தெருவில் பல்வேறு இடங்கள் குண்டும் குழியமாக காட்சி அளிக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள்மிகவும் கவனமாக செல்ல வேண்டியுள்ளது. அதிலும், மழை நேரத்தில் இந்த சாலையில் செல்வது சவாலாக மாறியுள்ளது. உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இதுதவிர, பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினர்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிதாக பெரிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சூளைமேடு, கோடம்பாக்கத்தில் 36 தெருக்களில் ரூ.24 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 109-வது வார்டில் உள்ள 21 தெருக்களில் ரூ.16 கோடியிலும், 112-வது வார்டில் உள்ள 15 தெருக்களில் ரூ.8 கோடியிலும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.
ஒருநேரத்தில் எல்லா இடங்களிலும் பணிகள் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஒவ்வொரு தெரு, சாலையாக கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. சமீபத்தில் மழை காரணமாக பணிகள் தாமதமாகி இருந்தன. இப்போது பணிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட சாலைகள், தெருக்களில் 10 முதல் 15 நாட்களில் முடித்து விடுவோம். பணி முடித்தபிறகு, சாலைகள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago