ஆன்மிக பூமியான புதுச்சேரியில் கலாச்சார சீரழிவின் உச்சம்: அதிமுக குற்றச்சாட்டு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ஆன்மிக பூமியான புதுச்சேரி மெல்ல மெல்ல கலாச்சார சீரழிவை நோக்கிச் சென்று 3 ஆண்டுகளில் சீரழிவின் உச்சத்துக்கு வந்துள்ளதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது.

புதுச்சேரி உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏ-வான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அன்பழகன் பேசியது: “புதுச்சேரி மாநிலத்தில் ஏறத்தாழ 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுக உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை கொண்ட ஒரு மாபெரும் கட்சியின் உறுப்பினர் என்பது நமக்குப் பெருமைக்குரிய விஷயமாகும். அதை உணர்ந்து நாம் என்றைக்கும் அதிமுக பொதுச் செயலாளருக்கு விசுவாசமாக நடக்க வேண்டும்.

நம்மை அழிக்க நம்முடைய எதிரியான திமுகவுடன் கைகோத்தவர்கள் இன்று காணாமல் போய்விட்டனர். அதேபோன்று அதிமுகவின் செயல்பாட்டையும், வெற்றிச் சின்னமான இரட்டை இலையையும் முடக்க நினைத்தவர்களின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றிவாய்ப்பை இழந்தது என்பது ஒரு தற்காலிக தேக்க நிலைதான்.

எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவை வீறுகொண்டு எழ வைத்து மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக ஆட்சியை நம்முடைய பொதுச்செயலாளர் கொண்டு வருவார். புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசானது ஒரு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை மக்கள் மீது திணிக்கும் ஆட்சியாக புதுச்சேரி ஆட்சி உள்ளது. மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் மேம்படுத்தப்படவில்லை. இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. விவசாய விளைநிலங்கள் சகட்டு மேனிக்கு அழிக்கப்பட்டு வருகின்றன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த அரசு சார்பு பஞ்சாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

மாநிலத்தின் நிதி வருவாய் சுற்றுலாவையும், மதுவையும் நம்பி உள்ளது. நகரப்பகுதி முழுவதும் ஆடல் பாடல்களுடன் புற்றீசல் போன்று ரெஸ்டோ பார்கள் தினந்தோறும் திறக்கப்படுகின்றன. அங்கெல்லாம் இரவு 2 மணி வரை வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண்களும், இளம் பெண்களும் ஆட்டமும் பாட்டமுமாய் இருக்கின்றனர். ஆன்மிக பூமியான புதுச்சேரி மெல்ல மெல்ல கலாச்சார சீரழிவை நோக்கிச் சென்று கடந்த 3 ஆண்டுகளில் சீரழிவின் உச்சத்துக்கு வந்துள்ளது. வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலால் புதுச்சேரி நகரவாசிகள் அல்லல்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசானது புதுச்சேரி மாநிலம் எப்படி கெட்டுப்போனால் என்ன அரசுக்கு வருவாய் வந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளது. புதுச்சேரி மக்களின் நன்மைக்காக புதுச்சேரியை மீட்டெடுக்கும் போராட்டத்தை நாம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். 6 எம்எல்ஏ-க்களை வைத்துள்ள திமுக இந்த அரசின் அனைத்து தவறான முடிவுகளுக்கும் துணை போகின்றது. இந்நிலை மாற வேண்டுமானால் புதுச்சேரி மாநிலத்தில் மக்களை பற்றி சிந்திக்கும் அதிமுக ஆட்சி ஏற்பட வேண்டும்'' என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE