சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக காணப்படுவதால், பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
பெண்கள் கிறிஸ்தவ மகளிர் கல்லூரி சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான போட்டியின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தக் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆக.30) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விழாவை தொடக்கி வைத்து பேசியதாவது: பெண்களின் வளர்ச்சி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேசி வருகிறார். இன்று பெண்களுக்கு எல்லா கதவுகளும் திறந்து உள்ளன. தற்போது ஆண்களைவிட பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேநேரம் போதைப் பொருட்களின் பரவல் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. தனிநபர், குடும்பத்தை மட்டுமின்றி சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே அவை சிதைத்து விடுகின்றன. ஒருகாலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விவசாயம் உட்பட பல்வேறு செயல்பாடுகளில் முதன்மையாக இருந்தன. ஆனால், இன்று போதை பொருட்களால் அவற்றின் நிலமை மாறியிருக்கிறது. சிறப்பாக இருந்த பஞ்சாப் மாநிலம் தற்போது போதை பொருட்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. மேலும், ஹெராயின், கொகைன் போன்ற போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி உள்ளனர். தற்போது பல பில்லியன் கணக்கில் பணம் ஈட்டக்கூடிய தொழிலாக போதைப்பொருள் விற்பனை உள்ளது.
போதைப்பொருளை புழக்கத்தில் விடுவதற்கான சிண்டிகேட் தமிழகத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடல் எல்லைப் பகுதிகளில் வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை மெட்ரிக் டன் கணக்கில் நமது கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்கின்றனர்.
போதை மருந்துகளால் வரும் பணத்தில் தான் ஆப்கானிஸ்தான் பொருளாதாரமே உள்ளது. எனவே, போதைப் பொருள் பிரச்சினையை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது மிகப்பெரிய பிரச்சினை. நாம் போதைப் பொருள் பழக்கத்தை குறைக்க நினைக்கக்கூடாது. அதை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகிறார்கள். பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி பேசுவதில்லை. நாம் போதை பொருட்கள் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
பெற்றோர்கள் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தாலும் குழந்தைகளிடம் பேச அவர்கள் நேர ஒதுக்க வேண்டும். வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் சொல்வதை ஏற்க முடியாது. தற்போது பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.
பெண்கள் வளர்ச்சி என்பது வெறுமனே தனிநபர் வளர்ச்சி இல்லை. அது தேசிய வளர்ச்சி. பெண்கள் வளர்ந்தால் தேசம் வளரும். உங்கள் கனவுகளை போதைப்பொருட்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் தடுக்கும். எச்சரிக்கையாக அவற்றை கடந்து வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago