மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: திருச்சி என்ஐடி-யில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம் - நடந்தது என்ன?

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும், விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் திருச்சி என்ஐடி வளாகத்தில் வியாழக்கிழமை இரவில் இருந்து மாணவ - மாணவியர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு நேரில் சென்ற காவல் துறை கண்காணிப்பாளர் மாணவர்கள் சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) அமைந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

என்ஐடி வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் இன்டர்நெட் வசதிக்காக கேபிள் வயர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஓவல் விடுதிக்குள் கேபிள் வயர் பொருத்தம் பணியில் ஈடுபட்ட முதுகுளத்தூரைச் சேர்ந்த காந்தி என்பவரது மகன் கதிரேசன் (38) அந்த விடுதியின் ஓர் அறையில் தனியாக படித்துக் கொண்டிருந்த மாணவியை பார்த்ததும் ஆபாச அத்துமீறல் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டபடியே வெளியே ஓடி வந்து அதுகுறித்து சக மாணவ - மாணவியரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாணவிகள் விடுதி வார்டனிடம் முறையிட்ட போது, “நீ ஆடைகளை ஒழுங்காக அணிந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது” என்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி, கண்ணீர்விட்டு கதறிய அழத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு கொதித்துப் போன சக மாணவ - மாணவியர் விடுதி அறைக்குள் மாணவிகள் இருக்கும்போது ஆண் பணியாளர்களை அனுமதித்தது எப்படி என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மாணவ - மாணவியர் வியாழக்கிழமை இரவு விடுதி நிர்வாகத்தையும் என்ஐடி நிர்வாகத்தையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த பணியாளர் கைது: மேலும், பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த மாணவியின் தந்தை இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

விடிய விடிய போராட்டம்: ஆயினும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும், விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும் கண்டித்தும் மாணவ - மாணவியர் தொடர்ந்து விடுதி முன்பு விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துவாக்குடி போலீஸார், மாணவ - மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து முசிறி டிஎஸ்பி-யான சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவ - மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் சம்பவ இடத்துக்கு ஏடிஎஸ்பி கோபால் சந்திரன் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதையும் ஏற்காத மாணவ - மாணவியர் கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் ஜி.அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகிலா நேரில் வரவேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

என்ஐடி இயக்குநர் பேச்சுவார்த்தை: இந்த நிலையில், “மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் தங்களது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்வோம்” என போலீஸார் எச்சரித்தனர். ஆனால் அப்படியும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து அதிகாலை 4 மணி அளவில் என்ஐடி இயக்குநர் அகிலா மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து விடுதி வார்டனை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த மாணவர்கள் புறப்பட்டனர். இதையடுத்து என்ஐடி நுழைவு வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கதவருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாசம் உள்ளிட்டோர் மாணவ - மாணவியரிட்ம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமாதானம் செய்த எஸ்.பி: தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்பி-யான வீ.வருண்குமார் மாணவ,மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து விடுதி வார்டன் பேபி மன்னிப்புக் கோரியதை அடுத்து மாணவ - மாணவியர் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எஸ்பி-யான வருண்குமார், “விடுதிக்குள் எந்தவிதமான அறிவிப்பும் இன்றி யாரும் உள்ளே வரக்கூடாது என்றும், போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் மாணவிகள் வலியுறுத்தினர். கல்லூரி நிர்வாகம் அதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதை அடுத்து மாணவ - மாணவியர் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.” என்றார்.

ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஐடி கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்த மாணவி ஒருவர், விடுதி வார்டனுக்கு தெரியாமல் இரண்டு நாட்களாக தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றபொழுது அந்த மாணவி அப்பகுதியில் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்